விநாயகரைத் திருடியவர் பொலிஸில் சரண்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிடில்டன் தோட்ட விநாயகர் கோயிலின் விநாயகர் சிலையை திருடிய நபர் சிலையுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

MILTON

கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி அதிகாலை தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிடில்டன் தோட்டத்திலுள்ள விநாயகர் கோயிலின் சிலை திருடப்பட்டது .

இத்திருட்டுடன் சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தோட்ட மக்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸார்  தொடர்ச்சியாக விசாரனைகளையும் தேடுதல்களையும் முன்னெடுத்து வந்தனர்.

இதனையறிந்த சந்தேக நபர் சிலையுடன் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு 9.30 மணியளவில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த நபரை பொலிஸில் தடுத்து வைத்து விசாரித்து வருவதாகவும் திருடப்பட்ட விநாயகர் சிலையும் பொலிஸ் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலையை திருடிய நபர் மிடில்டன் தோட்டத்தை சேர்ந்தவரென்றும் இதற்கு முன்னர் இக்கோயிலில் இடம்பெற்ற திருட்டுகளுக்கும் இவரே காரணமென்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.