சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவிடம் இருந்து புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அதிகாரபூர்வமாக ஆணையிட்டு இயக்கி வைத்தார்.
கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்த நிகழ்வு நேற்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றது.
‘சயுரால’ கப்பலின் கட்டளை அதிகாரியாக, கப்டன் நிசாந்த அமரோசவுக்கு ஆணையிடும் அதிகாரத்தை வழங்கிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதையடுத்து, கப்பலின் பெயர்ப்பலகையையும் திறந்து வைத்தார்.
தொடர்ந்து கப்பலின் இயந்திர அறைக்குள் சென்று அதனை செயற்பாடுகளைப் பார்வையிட்ட அவர், கப்பலின் சுக்கானை இயக்கி முறைப்படி செயற்பட வைத்தார்.
சிறிலங்கா அதிபர் ஒருவர் இத்தகைய ஆணையிடும் நிகழ்வில் பங்கேற்றது இதுவே முதல்முறையாகும்.
இந்த நிகழ்வில் சிறிலங்கா அமைச்சர்கள், அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், இந்திய பாதுகாப்பு அமைச்சின், இந்திய கடற்படையின் தென்பிராந்தியத் தளபதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.