அரச முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் முதியவர்களின் நிலை அனைவரையும் நெகிழ வைத்தது

யாழ்ப்பாணம் கைதடி அரச முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் முதியவர்கள் தமது மனவேதனையை, ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளனர்.

GRANDMA

உயிருடன் இருக்கும் போது எம்மை வந்து பார்த்து ஆறுதல் கூறாத எமது உறவுகள் நாம் இறந்த பின்னர் இறப்புச் சடங்குகளில் ஏன் கலந்து கொள்கின்றார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதியோர் இல்லத்தில் நேற்றுமுன்தினம் முதியோர்களுக்கான இணக்க சபை ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முதியவர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படையாக கவலையுடன் இல்ல அத்தியட்சகர் முன்னிலையில் தெரிவித்தனர்.

இந்த முதியோர் இல்லத்தில் நாங்கள் பல ஆண்டு காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்திருக்கிறோம். என்றோ ஒருநாள் நாங்கள் இறக்கத்தான் போகிறோம். நாங்கள் இறந்தால் எமது உறவுகளுக்கு அறிவிக்காதீர்கள். எமது உடலை அரச செலவில் தகனம் செய்யுங்கள்.

நாங்கள் உயிருடன் தற்போது இருக்கும் போது எமது உறவுகள் எம்மை வந்து பார்க்கிறார்களா? ஆறுதல் கூறுகிறார்களா? அவர்கள் இந்தப் பக்கம் வருவதில்லை. நாங்கள் உயிருடன் இருக்கிறோமா இல்லையா என்பது பற்றி அவர்களுக்கு தெரியாது. இறந்த பின்னர் இறப்புச் சடங்குகளில் கலந்து கொண்டு கண்ணீர் விடுவதில் எவ்வித பயனும் இல்லை என முதியவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

உறவுகளின் வருகையை எதிர்பார்த்து பல முதியவர்கள், கைதடி இல்லத்தில் காத்திருப்பதாக இல்ல அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

முதியவர்களின் இப்படியான மன உலைச்சலுக்கு உரிய ஆறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.