கொழும்பு டெஸ்ட்: புஜாரா, ரகானே சதத்தால் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவிப்பு

கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்துள்ளது.

ind

கொழும்பு டெஸ்ட்: புஜாரா, ரகானே சதத்தால் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவிப்பு
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் தொடக்க வீரர் அபிநவ் முகுந்த் நீக்கப்பட்டு, லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. ஒரேயொரு வேகப்பந்து வீச்சாளருடன் இலங்கை களம் இறங்கியது.
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ரகானே

தொடக்க வீரர்களாக தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். தவான் தொடக்கம் முதலே அடித்து விளையாடினார். இதனால் முதல் 10 ஓவரில் இந்தியா 56 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை தில்ருவான் பெரேரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் தவான் எல்.பி.டபிள்யூ மூலம் ஆட்டம் இழந்தார். தவான் 37 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 35 ரன்கள் சேர்த்தார்.
கோலியை வீழ்த்திய ஹெராத்தை பாராட்டும் சக வீரர்கள்

2-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. முதல் நாள் மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 6 முறை அரைசதம் அடித்தார்.

இந்திய அணி முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 52 ரன்னுடனும், புஜாரா 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
சதம் அடித்த மகிழ்ச்சியில் புஜாரா

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. இந்தியாவின் ஸ்கோர் 109 ரன்னாக இருக்கும்போது ராகுல் 57 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி 13 ரன்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்தில் ஆட்டம் இழந்தார். கோலி அவுட்டாகும்போது இந்தியா 133 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து 4-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா 112 பந்துகளில 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இருவரும் தேனீர் இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இந்தியா முதல் நாள் தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 89 ரன்களுடனும், ரகானே 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. புஜாரா சிறப்பாக விளையாடி 164 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். இது அவரின் 13-வது சதமாகும். மறுமுனையில் விளையாடிய ரகானே 83 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரின் ஆட்டத்தால் இந்தியா 76.1 ஓவரில் 300 ரன்னைத் தொட்டது.

அரைசதம் அடித்த ரகானே தொடர்ந்து சிறப்பாக விளையாடி 151 பந்தில் 12 பவுண்டரியுடன் தனது 9-வது சதத்தை பூர்த்தி செய்தார். இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை நிலைத்து நின்றனர். இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 128 ரன்களுடனும், ரகானே 103 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு இதுவரை 211 ரன்கள் சேர்த்துள்ளது.

நாளை 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் இருவரும் நிலைத்து நின்று விளையாட வாய்ப்புள்ளது. இல்லையென்றாலும், சகா, அஸ்வின், பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோர் உள்ளதால் இந்தியா எப்படியும் 500 ரன்களை தாண்ட வாய்ப்புள்ளது.