இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில் வசமாக சிக்கியிருக்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்க பற்றிய ஜனாதிபதியின் நிலைப்பாடு இன்னும் ஓரிரு தினங்களில் வெளிவருமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சர் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்துள்ள இந்தப் பிணைமுறி மோசடி சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கை அரசின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என்பதை ஜனாதிபதி நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்.
எனவே, இது தொடர்பில் அவரது நிலைப்பாடு பற்றிய அறிவிப்பு முக்கியத்துவம் பெறும் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிணைமுறி மோசடி பற்றி விசாரணை செய்ய தன்னால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகளில வெளியாகியிருக்கும் திடுக்கிடும் தகவல்களால் ஜனாதிபதி பெரிதும் அதிர்ச்சியடைந்திருக்கின்றார்.
இந்நிலையில் ரவி கருணாநாயக்க பற்றிய தீர்க்கமான முடிவொன்றை அவர் எடுக்கவேண்டியது முக்கியம் எனவும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.