பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி தொடர்ச்சியாக 40 வருட கால சேவையைப் பூர்த்திசெய்தமைக்காக வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வை பொது எதிரணியான மஹிந்த அணியும், ஜே.வி.பியும் புறக்கணித்தன.
நாடாளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு முடிவடைந்த பின்னர், பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணையை முன்வைத்து சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றினார்.
பிரேரணையை வழிமொழிந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றினார். அதன்பின்னர் நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், திகாம்பரம், மனோ கணேசன், டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கட்சிகளின் சார்பில் பிரதமரை வாழ்த்தி உரை நிகழ்த்தினர்.
சிரேஷ்ட உறுப்பினர் என்ற அடிப்படையில் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவுக்கும், ஆளுங்கட்சியின் பிரதம கொறடா என்றவகையில் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுக்கும் உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.
எனினும், பொது எதிரணியான மஹிந்த அணி மற்றும் ஜே.வி.பியின் சார்பில் எந்தவொரு உறுப்பினர்களும் விசேட நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான கூட்டமைப்பு பங்கேற்றிருந்தது.
பொது எதிரணியினதும், ஜே.வி.பியினதும் இந்த நடவடிக்கையை அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் வன்மையாகக் கண்டித்தனர்.
அதேவேளை, நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமருக்காக விசேட பூஜை வழிபாடும் நடைபெற்றது.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் எம்.பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உட்பட மேலும் பலரும் நேற்று நாடாளுமன்றம் வந்திருந்தனர்.
பார்வையாளர் கலரியும், சபாநாயகர் விருந்தினர் கலரியும் நேற்று நிரம்பியிருந்தது. காலை 10.30 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவைக்குள் வரும்போது அனைத்து உறுப்பினர்களும் எழுந்துநின்று வரவேற்பளித்தனர்.
பிரதமரின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் சபாநாயகர் விருந்தினர் கலரியில் அமர்ந்திருந்தவாறு சபை நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.