ரணில் விக்ரமசிங்க அமைதியான உறுதியான திடமுள்ள ஒரு மனிதர் என எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40 ஆண்டு கால நாடாளுமன்ற நிறைவை முன்னிட்டு சிறப்பு நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்து பேசிய அவர்,
ரணில் விக்ரமசிங்க அமைதியான உறுதியான திடமுள்ள ஒரு மனிதர். நானும் ரணில் விக்ரமசிங்கவும் ஒரே காலகட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்தபோதும், 1983ம் ஆண்டு இடம்பெற்ற விரும்பத்தகாத விளைவுகளால், நாடாளுமன்றத்தில் இருந்து நான் விலகியிருந்தேன்.
இந்த நாட்டின் நலக் கருதி ரணில் விக்ரமசிங்க முடிவுகளை எடுக்கக் கூடிய திடமான தலைவர்.
கடந்த 2015ம் ஆண்டு எதிர்க் கட்சித் தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடிந்த போதும், அதனை விடுத்து, பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்தியமை ரணில் விக்ரமசிங்கவின் மிக முக்கியமான முடிவாக அது அமைந்திருந்தது.
அத் தீர்மானம் தான் தேர்தல் முடிவுகளின் போது நியாயப்படுத்தப்பட்டது.
அன்று அவர் எடுத்த முடிவு நாட்டின் நலக் கருதியாக இருந்தது. மாறாக அவர் தன்னுடைய நலன் கருதியதாக எடுக்கவில்லை. அவரின் இந்த முடிவினால் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பனவற்றை அடைந்து கொள்ள முடிந்துள்ளது.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க தன்னுடைய முற்போக்கான நடவடிக்கைகளால் நாட்டின் தேசிய இனப்பிரச்சினையினை தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.
நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் நல்லிணக்கத்தின் குறிக்கோள்களை அடைவதற்கு பிரதமரும், ஜனாதிபதியும் இணைந்து செயற்பட வேண்டும்.
இந்த இணைந்த செயற்பாடுகளின் மூலமாகவே எதிரப்பார்ப்பான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பேசியுள்ளார்.