தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது பாதிக்கப்பட்டு தங்கள் உடைமைகளை இழந்து, அகதிகளாக தமிழகத்திற்கு வந்தவர்கள்.
இலங்கையில் ஏற்பட்ட இன மோதல்களின் தொடர்ச்சியாக உயிரைக் காத்துக் கொள்வதற்காக எந்தவித பாதுகாப்புமில்லாத மீன்பிடிப் படகுகளில் அகதிகளாக இந்தியா நோக்கி வந்தவர்கள் இவர்கள்.
ஆரம்ப காலங்களில் அகதி மக்கள் குடியிருப்புகள் பாதுகாப்பு வளையங்கள் போன்றே இயங்கி வந்தன.
ஒவ்வொரு முகாமிலும் காவல்துறை அலுவலர்கள், புலனாய்வுத்துறை அலுவலர்கள் இருப்பார்கள்.
அவர்களின் அனுமதி பெற்றே வெளியே செல்ல வேண்டும். மாலைக்குள் முகாமுக்குத் திரும்பிவிட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன.
காலப்போக்கில் கட்டுப்பாடுகள் குறைந்து, அகதி மக்களும் தமிழக மக்களைப் போன்றே நடமாடும் நிலை ஏற்பட்டிருந்தாலும் கூட, இன்றும் அகதி மக்களை அரசு அதிகாரிகள் தணிக்கை என்னும் கணக்கெடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது.
முகாமை விட்டு வெளியே செல்வதாக இருந்தால் அங்குள்ள நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்திட்டுதான் செல்ல வேண்டும் என்னும் விதி இன்றும் உள்ளது.
பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறையின் அனுமதியுடன் இலங்கைத் தமிழ் அகதி மக்களுக்கு மறுவாழ்வுப் பணிகளைச் செய்து வந்தாலும் தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் முகாம்களில் எந்தவோர் அடிப்படை வசதிகளும் முறையாக இல்லாத அவலநிலைதான் தொடர்கிறது.