இளைஞர்கள் குழு மேற்கொள்ளும் சமூகவிரோத செயற்பாடுகளை விடுதலைப் புலிகள் என அர்த்தம் கொள்ளமுடியாது

பொலிஸ்மா அதிபர் கூறுவதை போன்று தமிழீ்ழ விடுதலைப் புலிகளினால் வடக்கில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என இராணுவத்தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Major-General-Mahesh-Senanayake-1021x563

மல்வத்துப்பீட மற்றும் அஸ்கிரியப்பீட மகாநாயக தேரர்களை இன்றைய தினம் சந்தித்து ஆசிப்பெற்றுக்கொண்ட அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இளைஞர்கள் குழு தமது தேவைக்காக சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடலாம். இதனை விடுதலைப் புலிகள் என அர்த்தம் கொள்ளமுடியாது.

விடுதலைப் புலிகள் இல்லை என்று நான் கூறவில்லை. எனினும், அதன் அர்த்தம் முழுமையாக விடுதலைப் புலிகள் அல்ல. பொலிஸ்மா அதிபர் கூறுவதில் சில உண்மைகள் இருக்கலாம்.

எவ்வாறாயினும், இம்மாதிரியான சமூக விரோத அமைப்புகளை எதிர்கொள்ள முப்படையினரும் தயாராகவே இருக்கின்றோம். அத்துடன், நாட்டில் சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் படையினர் யாரும் குற்றம் செய்யவில்லை எனவும், இராணுவத்தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு படையினர் குற்றம் செய்திருந்தால் தண்டனை அனுபவித்தாக வேண்டும் என இராணுவத்தளபதி மேலும் கூறியுள்ளார். இதேவேளை, அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர,

“நாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்படாத நிலையில் எங்கோ ஒரு மூலையில் பயங்கரவாதம் முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றது” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.