2006ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் விடுதலை !

2006ஆம் ஆண்டு வைகாசி மாதம் விடுதலைப் புலி உறுப்பினரான வாசு கோபால் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

images

2005ஆம் ஆண்டு இலங்கை தரைப்படையை சேர்ந்த மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கவையும், மேஜர் மஜீத்தையும் சதி செய்து குண்டு வைத்து கொலை செய்ய திட்டமிட்டதாக இரண்டு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது முன்வைக்கப்பட்டன.

இது குறித்த குற்றச்சாட்டுப் பத்திரங்கள் சட்டமா அதிபரினால் 2009ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் எதிரி தரப்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தனது சமர்ப்பனத்தில்,

அரச தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்கையில் பல முக்கியமான முரண்பாடுகளை இந்த நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதுடன் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் முன்பு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை என்பதும், சாட்சியத்தில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை வழங்க வருபவருக்கு அவ்வாறு குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கினால் ஏற்படும் சட்ட விளைவுகளை தான் விளங்கப்படுத்தவில்லை என்பதை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறுக்கு விசாரணையில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிஸாரினால் எதிரி மிகக் கடுமையாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையினால் ஏற்பட்ட பல காயவடுக்கள் சட்ட வைத்திய அதிகாரியின் சட்ட வைத்திய அறிக்கையிலும் சாட்சியத்திலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிரி இந்த நீதிமன்றில் சாட்சியம் வழங்கிய பொழுது பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிஸார் தன்னை சித்திரவதைப்படுத்தி வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டார்கள் என்பதுடன் தனது சொந்த விருப்பத்தில் தான் எந்த வாக்குமூலமும் வழங்கவில்லையென சாட்சியம் அளித்துள்ளார்.

சிரேஸ்ட அரச சட்டத்தரணி எதிரியை நீண்ட நேரம் குறுக்கு விசாரணை செய்த போதிலும் எதிரியின் சாட்சியத்தின் நிலைப்பாட்டில் எந்த முரண்பாட்டையும் அரச தரப்பால் முன்வைக்க முடியவில்லை. மேலும் வேறு சாட்சிகளையும் அரச தரப்பு முன்வைக்கவில்லை.

எனவே எதிரியை சகல குற்றச் சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்யும் படி சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தை முன்வைத்தார்.

அரச தரப்பினதும் எதிரி தரப்பினதும் வாதப் பிரதிவாதத்தை அடுத்து கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க எதிரியை இரண்டு வழக்கிலிருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

அரச தரப்பில் சிரேஸ்ட அரச சட்டத்தரணி வசந்த பெரேராவும் எதிரியின் சார்பில் சட்டத்தரணிகளான தர்மஜா தர்மராஜா, அனோமா பிரியதர்சினி ஆகியோரின் அனுசரணையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.