பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள ரூபாய்!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

sri-lankan-rupee-1024

இந்த வருடத்தில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 2.5 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில் அவை இன்னமும் வீழ்ச்சியடையும் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாய் வலுவடைதல் என்பது பொருளாதாரத்திற்கோ அல்லது மக்களுக்கோ அவசியம் அல்ல என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் உள்ளூர் பரிமாற்றம் வலுவடையும் போது வெளிநாட்டு தயாரிப்புகளுக்கு அதிக இலாபம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரூபாவின் பெறுமதி டொலருக்கு அமைவாக போட்டித் தன்மையுடன் அதிகரிப்பது அவசியமாகும். ஏற்றுமதியை அதிகரிப்பது பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி, முதலீடுகள் என்பனவற்றை அதிகரித்து புதிய தொழில்வாய்ப்புக்களும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தின் ஊடாக இந்த வருடம் டிசம்பர் மாதம் வரையில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் முறையான விதத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்து வருகின்ற நிலையில், நாட்டின் பொருளாதாரக் கொள்கை பற்றி சர்வதேச நாணய நிதியமும் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் தேசிய பொருளாதாரம் 2.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. இயற்கை அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 6.8 சதவீத்தினால் அதிகரித்திருந்தது. பணவீக்கம் 6.1 சதவீதத்தில் இருந்து 4.8 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.

சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுவதாகவும் இவ்வருடத்தில் இதுவரை பத்து இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளானர் என மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்தார்.