யாழ் பல்கலைக்கழகத்தில் நிகழவிருக்கும் மாநாட்டில் அரசியல் பேச தடை !

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து 13வது உலக தமிழராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடாத்தவுள்ள நிலையினில் யாழ்.பல்கலைக்கழக நிகழ்வினில் அரசியல் உரைகளிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் புலம்பெயர் நாடுகளை சேர்ந்த 200 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

front-view_slider

1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4வது உலக தமிழராய்ச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து மேற்படி 13வது உலக தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தவுள்ளது.

இதன்படி 5ம் திகதியான நாளை சனிக்கிழமை முதலாவது மாநாடு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது. இம் மாநாட்டில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இரத்னம் விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ் அமர்வில் பன்னாட்டு மலர் வெளியீட்டு சிறப்புரையினை சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆற்றவுள்ளார்.

இரண்டாவது மாநாடு யாழ்.நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெறவுள்ளது. இதில் முதன்மை விருந்தினராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை எதிர்க்கட்சிதலைவருமான இரா.சம்மந்தன் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் கௌரவ விருந்தினர்களாக இந்திய துணைத்தூதுவர் எ.நடராஜன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் அரியரத்தினம் கவிந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையினில் தற்போது யாழ்பல்கலைக்கழக அமர்வினில் அரசியல் பேச தடைவிதிக்கப்பட்டுள்ளது. அங்கு வாழ்த்துரைகளுடன் ஆய்வுக்கட்டுரை வாசிப்புக்கள் நடக்கவுள்ளன.

இதனிடையே வருகை தந்துள்ள விருந்தினர்கள் சகிதம் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசாவிற்கான 75வயது பூர்த்திக்கான பவள விழாவும் நடைபெறவுள்ளது.