இந்திய அணிக்கெதிராக எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் விலகியிருப்பாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு பின்னரான செய்தியாளர் சந்திப்பின்போது அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன உறுதிப்படுத்தினார்.
இதன்போது அவர் கூறுகையில், “இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 81ஆவது ஓவரை வீசும்போது இடது தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட நுவன் பிரதீப், மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார். அவர் சிலவேளை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு அணியில் இடம்பெற மாட்டார்” என கூறினார்.
சமீபகாலமாக நிலைக்குலைந்துவரும் இலங்கை அணிக்கு நுவன் பிரதீப்பின் இழப்பு பேரிழப்பாக பார்க்கப்படுகின்றது. காலியில் நடைபெற்ற முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பிரதீப் 132 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.