புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயகலா கைது செய்யப்படுவதை தடுக்க அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் உதவி கோரியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சுவிஸ் குமார் என்பவரை புங்குடுதீவு பிரதேச மக்கள் சுற்றிவளைத்த போது அவரை விடுவித்து தப்பி செல்வதற்காக உதவியமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பல் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்ஹ இந்திரதிஸ்ஸவினால் நீதிமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் விஜயகலாவிடம் விசாரணை மேற்கொள்ளுமாறு குற்ற விசாரணை திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய கடந்த மாதம் 31ஆம் திகதி குற்ற விசாரணை திணைக்களத்திற்கு வருகை தருமாறு இராஜாங்க அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் அதற்கான அறிவித்தல் தனக்கு கிடைக்கவில்லை என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்ததுடன், விசாரணையை அவர் புறக்கணித்துள்ளார்.
அத்துடன் கடந்த வாரம் முழுவதும் குற்ற விசாரணை திணைக்களத்தில் விஜயகலா ஆஜராகவில்லை.
எப்படியிருப்பினும் இராஜாங்க அமைச்சர் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் “தற்போதைய நெருக்கடி தொடர்பில் பிரதமர் மற்றும் அமைச்சர் சாகலவிடம் தெரிவித்துள்ளேன். அச்சப்பட ஒன்றும் இல்லை என அமைச்சர் சாகல என்னிடம் குறிப்பிட்டார்…” என விஜயகலா மகேஸ்வரன் கூறியதாக சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவிடம் இது தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் விசாரணை மேற்கொள்வதற்கு மந்தமான நிலைமை கடைப்பிடித்து வருவதாகவும், அமைச்சர் சாகலவின் அழுத்தம் பிரயோகமே அதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் குறித்த ஊடகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.