திராவிட – ஆரியர்கள் … உயர்நிலை கல்விக்குப் போகும் போது படித்த ஞாபகம் இருக்கும். அதற்கென்ன இப்போது… இப்போதும் வில், வேல், யானைப்படை, குதிரைப்படை கொண்டு மோதிக்கொள்கிறார்களா?
இல்லை இல்லை… இது நுட்பமான அரசியல் மோதல். இந்தியாவின் பூர்வகுடிகள் யார்? வந்தேறிகள் யார்? இந்தியாவின் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகத்திற்கு சொந்தக்காரர்கள் யார்? இது போன்ற கருத்து ரீதியிலான மோதல்கள் தொடர்கின்றன.
மனித இனங்கள்
சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் காலநிலை மாற்றம், உணவுத் தேடல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆப்பிரிக்காவிலிருந்த மனித குழுக்கள் புறப்பட்டன. போகிற போக்கில் ஆங்காங்கே தங்கிவிட்ட மனித குழுக்கள் விவசாயம், கருவிகளை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட திறமைகள் கைவரப்பெற்று நதிக்கரைகளில் தங்கிவிட்டன. அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தின் காலநிலை, உணவு உள்ளிட்ட புறக்காரணிகள் தனித்த அடையாளங்களை உருவாக்கின. கூடுதலாக அவர்கள் உருவாக்கிய மொழியும் இணைந்து கொள்ள தனித்த இனமாக மனிதர்கள் உருவாகினார்கள்.
காக்கேசிய இனம், மங்கோலிய இனம், திராவிட இனம், ஆரிய இனம், நெக்ராய்டு இனம் உள்ளிட்ட பல இனங்கள் உலகமுழுவதும் தனித்த அடையாளத்துடன் காணப்பட்டன. இதில் இந்தியாவில் பல இனங்கள் காணப்பட்டாலும் திராவிட-ஆரிய இனங்கள் பிரதானமானவை. இன்றைக்கு தகவல் தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு காரணமாக இந்தியா முழுவதும் இன மாறுபாடுகள் இல்லாது கலந்தே வாழ்கிறார்கள். ஆனால் குறிப்பாக திராவிடர்கள் தென்னிந்தியாவிலும், ஆரியர்கள் வட இந்தியாவிலும் அதிக அளவில் பரவி இருக்கிறார்கள். உலகில் வேறு எங்கும் இல்லாத ஜாதி படிநிலையில் உயர் சாதி பிராமணர்களே இங்கு ஆரியர் இனமாக பார்க்கப்படுகிறனர்.
தமிழக்தின் பண்பாட்டு தலைநகரம்
உலகின் பழமையான பேரரசுகளில் பாண்டிய பேரரசும் ஒன்று. தமிழகத்தின் சேர, சோழ , பாண்டிய மன்னர்களில் மூத்த அரசு பாண்டியர்கள். 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலப்பதிகாரம் போன்ற இதிகாசங்களில் பேசப்படும் பூம்புகார் போன்ற நகரங்கள் அடையாளம் இழந்துபோக பாண்டியர்களின் தலைநகரான மதுரை நகரம் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது. தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற மதுரையில் கிடைத்த தொல்லியியல் சான்றுகளே முக்கிய காரணியாக இருந்தது. தமிழகத்தின் கலாச்சார தலைநகரமாக மதுரை விளங்குகிறது. பழமையான பெண் தெய்வவழிபாடு, சித்திரை திருவிழா, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பண்பாடு சார்ந்த நிகழ்வுகள் தொடரும் நகரம் இது. இன்றைக்கு இருக்கும் மதுரை நகரம் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டது. ஆனால் பாண்டியர்களின் முந்தைய தலைநகராக இருந்த மணலூர் பகுதியே பழைய மதுரையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் பக்கத்து மாவட்டமான சிவகங்கை மாவட்ட எல்லையில் கீழடி என்னும் கிராமத்தில் அகழ்வாய்வில் கிடைத்துவரும் நகரம் மணலூராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
கீழடி அகழ்வாய்வுக்கு பின்னான அரசியல்
110 ஏக்கர் அளவில் பரந்து விரிந்திருக்கிற பெரும் தென்னந்தோப்பு பகுதியில் ஒரு சதவீதம் அளவிலேயே இதுவரை இரண்டு கட்ட ஆகழ்வாய்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன. இதுவரை 5,300இற்கு மேற்பட்ட பொருட்கள் கிடைத்திருக்கின்றன. முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள், நூல் நூற்கும் தக்ளி, வணிக பயன்பாட்டிற்கான சுடுமண் முத்திரைகள் போன்றவை இங்கு கிடைத்துள்ளன. இவை சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருந்த பொருட்கள். குளியல் அறையுடன்கூடிய வீடுகள், தண்ணீரை வெளியேற்றும் கால்வாய்கள், கரும்சிவப்பு நிறத்திலான செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள். தென்னிந்தியாவின் மொகஞ்சதாரோ என வர்ணிக்கும் அளவுக்கு 2500 ஆண்டுகள் பழமையான நகரம் பூமியில் உறக்க நிலையில் இருந்துள்ளது.
மூன்றாம் கட்ட ஆய்வுக்கு அனுமதி கொடுத்த பின்பும் நிதி ஒதுக்கீடு செய்ய ஒரு மாதகாலம் இழுத்தடித்தது இன்றைய பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு.
சிந்துவெளி நாகரிகத்தை சிதைக்கும் முயற்சி
முதல்முறையாக பாரதிய ஜனதா (BJP) ஆட்சியை பிடித்து வாஜ்பாய் பிரதமராக இருந்த காலம். 1999-ம் ஆண்டு, அமெரிக்கவாழ் இந்துத்துவ கோட்பாட்டாளர் என். எஸ். ராஜாராம் மற்றும் தொல்லியல் வரைபட நிபுணர் நட்வர் ஜா ஆகியோர் இணைந்து எழுதிய “The Deciphered Indus Script” என்ற நூலில், ‘ஹரப்பா எழுத்து சமஸ்கிருத குடும்பத்திலிருந்து வந்தது’ என்கிறார்கள். சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் ஆரியர்களின் முன்னோடிகளே என்றார்கள். இதற்கு திருகுவேலை ஒன்றையும் செய்தார்கள். ‘ஹரப்பா நாகரிகத்தில் குதிரை இருந்தது’ என்றார்கள். சிந்து வெளியின் முக்கிய முத்திரைகளில் ஒன்று காளை மாடு. இந்த ஒற்றைக் கொம்பு காளையை, கொம்பு முளைத்த குதிரை என மாற்றினார்கள். ஆனால் ஆய்வின்படி ஆரியர்களின் புலம்பெயர்வுக்குப் பிறகே குதிரைகள் இங்கே கொண்டுவரப்பட்டன. குதிரைகள் கி.மு. 1500-ம் ஆண்டில் ஆரியர்களால் கொண்டுவரப்பட்டவை.
கடந்த 2016ம் ஆண்டில் ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து வெளிவந்த திரைப்படமே மொஹஞ்சதாரோ. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட படம். அதற்கு காரணம் அதன் இயக்குனர். லகான், ஜோதா அக்பர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அசுதோஷ்கெளரிகர்.
படம் முழுக்கவே சிந்துவெளியை சிதைக்கும் படி காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக ஆரிய மற்றும் இந்துத்துவா கோட்பாட்டாளர்களின் கருத்துகள் திணிக்கப்பட்டுள்ளன. படத்தில் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட ஹிந்தியை பயன்படுத்தியுள்ளனர். ‘வெண்கல யுகத்தில் பல மொழி பயன்பாடு இருந்திருக்கலாம் அல்லது மொழியே இல்லாமல் இருந்திருக்கலாம்’ என்கிறார்கள். அங்கே சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு மொழி பேசப்பட்டதாகவோ எழுதப்பட்டதாகவோ எந்தவித ஆதாரங்களும் இல்லை. இந்தப் படத்தில் குதிரைகள் காட்டப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்தில் எந்த இடத்திலும் குதிரைகள் இல்லை.
“சிந்துவெளி காலத்தில் பேசப்பட்ட மொழி சமஸ்கிருதமாக இருக்கலாம் என நிரூபிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து போய்விட்டன என சுட்டிக் காட்டுகிறார் இந்தியாவின் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் ரொமீலா தாப்பர்.
இந்திய சுதந்திரத்திற்கு முன்னால் அன்றைய இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குனராக இருந்த சர் ஜான் ஹியூபர்ட் மார்ஷல் தலைமையில் 1921-ம் ஆண்டில் சிந்து பகுதியில் அகழ்வாராய்ச்சி தொடங்கியது. மொகஞ்சதாரோ, ஹரப்பா பண்டைய நகரங்கள் அப்போதுதான் உலகின் வெளிச்சத்துக்கு வந்தன.
இதுவரை சிந்து வெளி பற்றிய ஆய்வுகளின்படி அங்கு குதிரைகள் பயன்படுத்தப்படவில்லை. இரும்பு பயன்பாடு அறிந்திராத வெண்கலயுகம். அங்குள்ள எழுத்துக்களை இதுவரை படித்தறிய முடியவில்லை. அங்கு வாழ்ந்தவர்கள் திராவிடர்களின் முன்னோடிகளாக இருக்கலாம், அல்லது அவர்களோடு நெருங்கிய தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்பது பெரும்பலான வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு.
கூடுதலாக சமீபத்தில் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் எழுதிய “சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” – என்ற நூல் ஆய்வு ஆச்சரியத்தையும், பல உண்மைகளையும் வெளிகொண்டுவந்துள்ளன.
வட இந்தியா உள்ளிட்ட இன்றைய வடமேற்கு இந்தியா முழுவதும் பண்டைய காலத்தில் திராவிட மொழி பேசப்பட்டன. கூடுதலாக “பிராகுயி” என்ற திராவிட மொழி இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு எல்லையில் இன்றும் பேசப்படுகிறது.
உண்மை இப்படியிருக்க, இந்துத்துவா அரசியலை முன்னிலைப்படுத்துகிற பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் பேதெல்லாம் ஆரிய மேன்மையை தூக்கிப்பிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது. கீழடியிலும், சிந்துவெளியிலும் அவர்கள் செய்துவரும் நுட்பமான இன மோதல் இதுவே..