வெளியாகியுள்ள அறிக்கைகள் வதந்திகள் : ரவி கருணாநாயக்க

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதாக வெளியாகியுள்ள அறிக்கைகள் வதந்திகள், முற்றிலும் முட்டாள்தனம் என ரவி கருணாநாயக்க தெரிவித்தள்ளார்.

z_pii-sri-lanka-03

 

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், அந்த தகவல்களில் உண்மையில்லை என்றும், தன்னை ஜனாதிபதி பதவி விலகுமாறு கோரவில்லை என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிணை முறி தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் ரவி கருணாநாயக்க, இனிமேலும் அமைச்சரவை அமைச்சுப் பதவியை தொடருவது அரசாங்கத்துக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் பிரச்சினை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து அவர் பதவி விலகுவதே சிறந்தது என ஜனாதிபதி கருதியதாகவும், இதனால் இந்தக் கோரிக்கையினை முன்வைத்தார் என்றும் அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற வாழ்வின் 40 ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று முந்தினம் அலரி மாளிகையில் நடந்த விருந்துபசாரத்தின் போதே, ஜனாதிபதி இதை தெரிவித்தாக செய்திகள் தெரிவித்தன.

ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை என்றும், அவை வதந்திகள் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 96 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.