அலோசியஸிடம் வீடு வாங்கியதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் ரவி கருணாநாயக்க தற்போது சிக்கியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் கருத்து வெளியிட்டுள்ள அவர் முறிகள் தொடர்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்ற அதேவேளை, அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், பிரச்சினை பெரிதாக வாய்ப்பு இருப்பதால் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
எனினும் ஜனாதிபதி அவ்வாறு சொல்லவில்லை என்றும், அது வதந்தி என்றும் ரவி கருணாநாயக்க மறுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த முறி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க,
அலோசியஸிடம் வீடு வாங்கியதாக ரவி கருணாநாயக்க தற்போது அகப்பட்டுள்ளார். இன்னும் வீடு வாங்கிய பலர் இருக்கின்றனர்.
இதேவேளை, வீடு வாங்கிய பலர் கோப் குழுவில் அலோசியஸிற்கு ஆதரவாக செயற்பட்டுள்ளனர்.
ரவி கருணாநாயக்கவிற்கும் அலோசியஸிற்கும் ஆதரவாக செயற்பட்டவர்கள் தற்போது அகப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளதுடன், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.