அமைச்சரவையை மாற்றியமைக்க முதலமைச்சருக்கு அதிகாரம்

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை, முதலமைச்சர் தமது தற்துணிபு மற்றும் சட்டரீதியான அதிகாரங்களின் அடிப்படையில் மாற்றியமைப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

vikineswaran

யாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று மாலை நடந்த நீண்ட பேச்சுகளை அடுத்து இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அதன் செயலர் என்.சிறீகாந்தா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கிய சந்திப்பு இரவு 9.45 மணிவரை நீடித்தது,

இந்தச் சந்திப்பின் போது மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்று, சந்திப்புக்குப் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், கட்சித்தலைவர்களும், முதலமைச்சரும் தமிழ்மக்களின் நலன்கருதி பின்வரும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

முதலமைச்சர் தனக்கிருக்கும் சட்டரீதியான தற்துணிபு அதிகாரங்களைப் பிரயோகித்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தவோ திருத்தி அமைப்பதற்கோ அங்கத்துவக் கட்சிகள் சம்மதத்தை வெளிப்படுத்துகின்றன.

அமைச்சர்கள் மாற்றப்பட்டால் அது குறித்த அமைச்சர் எந்த ஒரு குற்றச்சாட்டையும் இழைத்ததாக அர்த்தப்படாது.

அமைச்சரவை நியமனங்களைப் பொறுத்தமட்டில் அங்கத்துவக் கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்தில் எடுத்து அவை மேற்கொள்ளப்படவேண்டும். ஆகிய தீர்மானங்கள் எடுத்துள்ளோம்.

இன்னும் ஒரு ஆண்டு காலமே இருப்பதால், மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் எமக்குள் இருக்கும் முரண்பாடுகளை களைந்து இந்த தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

இந்த சந்திப்புக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் வரமாட்டார் என்று நாளிதழ்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. எனினும் எனது வேண்டுகோளை ஏற்று அவரும் இந்தச் சந்திப்புக்கு வந்திருந்தார்.

பலகாலங்களின் பின்னர், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து பல்வேறு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாணசபை தொடர்பான விவகாரங்கள் மட்டுமே பேசப்பட்டன.

இன்னொரு சந்திப்பில் அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசுவதற்கும் திட்டமிட்டுள்ளோம். எனவே வருங்காலம் நல்லதாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அமைச்சரவை மாற்றம் விரைவில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அது முழுமையானதா என்பது பற்றி இன்னமும் சிந்திக்கவில்லை என்றும் அவர் கூறினார்.