காலி மற்றும் தங்காலை கடற்படைத் தளங்கள் அம்பாந்தோட்டைக்கு மாற்றம்

காலி மற்றும் தங்காலையில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படைத் தளங்கள் அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு கையெழுத்திடப்பட்டதை அடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

sl-navy

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டின் படி, இராணுவத் தேவைகளுக்காக எந்தவொரு நாடும் அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பயன்படுத்த முடியாது. அதன் முழுமையான பாதுகாப்பையும் சிறிலங்காவே கையாளும் என்று கூறப்பட்டுள்ளது,

இந்த நிலையிலேயே, அம்பாந்தோட்டையில் சிறிலங்கா கடற்படை பாரிய தளம் ஒன்றை அமைக்கவுள்ளது. இதற்காகவே தற்போது தங்காலையில் உள்ள சிறிலங்கா கடற்படையின் தென்பிராந்திய தலைமையகம் மற்றும் காலியில் உள்ள கடற்படைத் தளம் என்பன அகற்றப்பட்டு, அவை அம்பாந்தோட்டையில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.

இதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு, மீரிஸ்ஸவில் உள்ள கடலோரக் காவல்படைத் தளம் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.