ஈழத்தமிழர்கள் நீண்ட வருடங்களாக எதிர்கொண்ட இனச்சிக்கலைத் தீர்ப்பதற்கு கொண்டுவரப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகி ஜூலை 29-ந் தேதியோடு 30 வருடங்கள் முடிந்துவிட்டன. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து தமிழீழம் அழித்தொழிக்கப்பட்டு ஒன்பது வருடங்கள் உருண்டோடிவிட்ட நிலையிலும் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே இடையே ஏற்படுத்திக்கொண்ட அந்த ஒப்பந்தம் சாதித்தது என்ன? என்கிற கேள்வி இன்னமும் முற்றுப்பெறவில்லை. தொடர்ந்தபடியேதான் இருக்கிறது.
இரு நாடுகளின் தலைவர்களிடையே ஏற்படுத்தப்பட்ட அந்த ஒப்பந்தம் கடந்துபோன 30 ஆண்டுகளில் எந்த தாக்கத்தையும் தீர்வையும் ஏற்படுத்தவில்லை என்பதிலிருந்தே, ‘ராஜீவ்காந்தியின் அரசியலில் மிகப்பெரிய ராஜதந்திர தோல்வி அதுதான் என்கிற விமர்சனம் யதார்த்தமாகவே இருக்கிறது. ஒப்பந்தம் உருவான காலகட்டத்தில் (ஜூலை 29, 1987) ஒப்பந்தத்திற்கு முன்பும் பின்பும் அரங்கேறிய நிகழ்வுகளில் வெளிவராத பல பக்கங்கள் இன்றும் ரகசியமானவைகள்தான். அவைகளைத் திருப்பிப் பார்க்கிறபோது மனது கனக்கவே செய்கிறது!
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் தற்போது தமிழீழம் அழிக்கப்பட்டதற்கும் மையப்புள்ளி டெல்லி! ஆக, டெல்லிக்கும் இலங்கைக்குமிடையே நடந்த உண்மையான டீல் என்ன? ஒப்பந்தத்தின் நிஜமான நோக்கம் எதுவாக இருந்தது? புலிகளும் இந்தியாவும் எந்த புள்ளியில் முரண்பட்டார்கள்? இணைந்த புள்ளி எது? இரு தரப்பும் ஆடிய விளையாட்டு என்ன? என்கிற பல கேள்விகளுக்கான பதில்கள் அதிர்ச்சியடைய செய்பவை.
ஜூலை 19, 1987. புலிகள் இயக்கத்தை எப்படி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என ஆலோசிப்பதற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி தலைமையில் ஒரு அவசரக்கூட்டம் டெல்லியில் கூடியது. தமது இல்லத்தில் நடந்த அக்கூட்டத்திற்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை , வெளியுறவுத்துறை, இந்திய உளவுத்துறைகளின் உயரதிகாரிகளை மட்டுமே அழைத்திருந்தார் ராஜீவ்காந்தி. கடைசி நேரத்தில் திடீரென அழைக்கப்பட்டவர் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் என்கிறார் ஒப்பந்தத்தின் நீள-அகலங்களை அறிந்த பத்திரிகையாளர் ஒருவர்.
அந்த ஆலோசனையில்,’”தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் மட்டுமே புலிகள் இயக்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும். அவரது சொல்லுக்கு பிரபாகரன் கட்டுப்படுவார். எம்.ஜி.ஆரை அணுகுவது சரியாக இருக்கும்’ என உளவுத்துறை அதிகாரிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகளோ, “தமிழகத்தில் இப்போது பிரபாகரன் இல்லை. அவர் இருப்பது யாழ்ப்பாணத்தில். அப்படியிருக்க எம்.ஜி.ஆர். இதில் என்ன உதவிட முடியும்? புலிகளுக்கு எம்.ஜி.ஆர். தகவல் அனுப்பி அவர்களிடமிருந்து தகவல்பெற்று அது டெல்லிக்கு வருவதற்கு காலதாமதமாகும் என சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இலங்கையுடனான ஒரு ஒப்பந்தத்தை ராஜீவ்காந்தி போட்டுக்கொள்ள ஏற்கனவே ரகசியமாக பல காய்கள் நகர்த்தப்பட்டிருந்ததால் “புலிகள் இயக்கத்தை விரைந்து இணங்க வைக்கவேண்டும்’ என ராஜீவ் ஏற்கனவே சொல்லியிருந்தார். அதனால்தான் எம்.ஜி.ஆர். மூலமாக எடுக்கப்படும் நடவடிக்கை காலதாமதமாகும் என்பதை சுட்டிக்காட்டினர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
சுட்டிக்காட்டப்பட்ட அந்த விசயத்தை யோசித்த ராஜீவ்காந்தி, “அப்படியானால் பிரபாகரனை உடனடியாக டெல்லிக்கு அழைத்து வர யாரால் முடியும்?’ என சட்டென்று கேள்வி எழுப்ப… “எங்களால் முடியும். ஆனால், வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்’ என்றனர் உளவுத்துறையினர் (ரா). மற்ற துறைஅதிகாரிகள் எதுவும் பேசவில்லை. ராஜீவ்காந்தியோ வெளியுறவு அதிகாரிகளை உற்று நோக்கினார். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட அதிகாரிகள், “”பிரபாகரனை டெல்லிக்கு அழைத்துவரும் பொறுப்பினை இந்திய அரசே ஏற்றுக்கொண்டால் இதில் சிக்கல் இருக்காது” என்றனர். மேலும், “”பிரபாகரனை இலங்கை ராணுவ முகாம் வழியாகக் கொண்டுவருவதில் சிக்கல் உருவாகும். அதனால், முதலில் பிரபாகரனிடம் பேசுவோம். பிறகு முடிவு செய்யலாம் என ஆலோசித்தளவில் அன்றைய கூட்டத்தை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்கின்றனர் ஈழ ஆதரவு தலைவர்கள்.
இதனையடுத்து மறுநாளே சென்னையிலுள்ள புலிகள் இயக்கத்தின் தொடர்பாளர்கள் மூலமாக, இந்திய பிரதமர் சந்திக்க விரும்பும் தகவலை பிரபாகரனுக்கு அனுப்பினர் ரா அதிகாரிகள். ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு இது தெரியவர, பண்ருட்டி ராமச்சந்திரன் மூலமாக டெல்லியை தொடர்புகொண்டு, “என்ன விளையாட்டு விளையாடப்போகிறீர்கள்?’ என கேள்வி எழுப்ப, எம்.ஜி.ஆரிடம் மேலோட்டமாக விபரம் சொல்லப்பட்டதுடன், “டெல்லிக்கு வர பிரபாகரனுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும்’ என்றும் அழுத்தம் தரப்பட்டது. இதனை மறுக்க முடியாமல், “ராஜீவ்காந்தியை சந்தியுங்கள்’ என பிரபாகரனுக்கு தகவல் அனுப்பினார் எம்.ஜி.ஆர்.
அதன்பிறகு டெல்லி, சென்னை, யாழ்ப்பாணம் என பல தகவல் பரிமாற்றங்கள் நடந்தும் முயற்சி வெற்றிபெறவில்லை. அடுத்த முயற்சியாக இலங்கையின் இந்திய தூதர் ஜே.என்.தீட்சித் மூலமாக எடுக்கப்பட்டது. இதனை அறிந்த டெல்லியிலிருந்த அமெரிக்க தூதர் ஒருவர், “எந்த நாட்டில் தீட்சித்தை இந்தியா தலையிட வைக்கிறதோ அந்த நாட்டுக்கும் இந்தியாவுக்கும் யுத்தம் வரும். அப்படியொரு ராசி தீட்சித்துக்கு உண்டு’ என அந்த காலக்கட்டத்தில் கமெண்ட் பண்ணிய சொல்லாடல் இது.
இலங்கைக்கான இந்திய தூதராக 1985-ல் நியமிக்கப்பட்ட தீட்சித்தும் அப்போதைய இலங்கை அமைச்சர் காமினி திசநாயகேவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து எழுதியதுதான் இந்திய-இலங்கை ஒப்பந்தம். ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துகள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. அவைகள் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக கொழும்புவிலிருந்த காமினியின் நண்பர் ஒருவரின் வீட்டில் அமர்ந்து தீட்சித்தே டைப் செய்தார். அதன் இறுதி வடிவம் நடந்துகொண்டிருந்த நிலையில்தான் பிரபாகரனை டெல்லிக்கு அழைக்கும் திட்டத்தை எடுத்தார் ராஜீவ்காந்தி. இந்த திட்டத்தை ராஜீவிடம் போட்டுக் கொடுத்ததே தீட்சித்தும் காமினியும்தான்.
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான ரகசிய வேலைகள் நடந்து வருவதை அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ரணில்விக்ரமசிங்கே மோப்பம் பிடித்திருக்கிறார். இதுகுறித்து அதிபர் ஜெயவர்த்தனேவுக்கு அவர் மறைமுக நெருக்கடி கொடுக்க, ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்றதும் தமது அமைச்சரவை சகாக்கள் சிலருக்கு மட்டும் அதனை காட்டலாம் என தீர்மானித்தார் ஜெயவர்த்தனே. இது ரணிலிடம் சொல்லப்பட, ஜூலை 15-ந்தேதி (1987) அமைச்சர்கள் சிலரின் கண்களுக்கு மட்டுமே காட்டப்பட்டது. அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் போடப்படும் எந்த ஒரு உடன்படிக்கையும் செல்லாததாகிவிடும். அதனாலேயே தமது அமைச்சரவை சகாக்களுக்கு காட்ட தீர்மானித்து, அதன்படி காட்டப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இருப்பினும் முக்கிய ஷரத்துகள் காட்டப்படவில்லை. அவைகள் மூடி மறைக்கப்பட்டன.
அப்படி மூடி மறைக்கப்பட்ட ரகசியங்கள் பின்னாளில் மெல்ல கசிந்திருக்கிறது. குறிப்பாக, இலங்கையின் வடகிழக்குப் பிரதேசங்கள் ஒன்றாக இணைக்கப்படுவதற்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டால், ஈழ விடுதலைக்கு அதுவரை இந்தியா செய்து வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்திக்கொள்ளும். அத்துடன் தமிழகத்திலிருக்கும் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் உள்ளிட்ட அவர்களது இயக்கத்தினரை இலங்கைக்கு இந்தியா நாடு கடத்தும் என்பது முக்கியமான ஷரத்து. ஒப்பந்தத்தின் ரகசிய பகுதியாக இருந்த இந்த ஷரத்து வெளிப்படையாக தெரிந்தால், ஈழ விடுதலைக்கு இந்தியா ஆயுத பயிற்சி அளித்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாகிவிடும்; சிங்கள மக்களின் எதிர்ப்பை ஜெயவர்த்தன அரசு நேரடியாக சந்திக்க வேண்டியது வரும்; ஈழ விடுதலை இயக்கத் தலைவர்கள் இந்தியாவை சந்தேகப்படுவதுடன் இந்தியா மீதான நம்பகத்தன்மையை இழப்பார்கள் என்பதினால்தான் மூடிமறைத்தனர் ராஜீவும் ஜெயவர்த்தனேவும்.
ஜூலை 16-ந் தேதி மேலும் சில அமைச்சர்களை சந்தித்து ஒப்பந்தத்தை விளக்கினார் தீட்சித். நான்கு நாட்கள் இதே நிலை நீடித்த சூழலில், ஜூலை 21-ல் சென்னைக்கு வந்த தீட்சித், எம்.ஜி.ஆரை சந்தித்தும் ஒப்பந்தத்தின் சில பக்கங்களை மட்டும் விளக்கிவிட்டு அன்றைய தினமே அவசர அவசரமாக கொழும்பு திரும்பினார். ஒப்பந்தம் குறித்து இப்படி பல ரகசிய நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில்தான், பிரபாகரனை டெல்லிக்கு அழைத்து வரவேண்டும்; அவரை அழைத்துச்செல்ல இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க இலங்கை அரசின் அனுமதி பெறவேண்டும் என தீட்சித்திடம் டெல்லி கேட்டுக்கொண்டது. உடனே ஜெயவர்த்தனேவை நேரில் சந்தித்து தீட்சித் பேச, அனுமதி தந்தார் ஜெயவர்த்தனே!
பிரபாகரனை அழைத்துச் செல்வதற்கு இந்திய விமானத்தை தரையிறக்க ஜெயவர்த்தனேவை சம்மதிக்க வைத்த தீட்சித், பிரபாகரனை சம்மதிக்க வைக்க நடத்திய சூழ்ச்சி என்ன? டெல்லி வந்த பிரபாகரனுக்கு நேர்ந்தது என்ன?