முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, தான் கைது செய்யப்படலாம் என்ற அச்ச உணர்வில் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக அதிலிருந்து தப்பும் வகையில், மந்திர மாயம் செய்யும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
வசீம் தாஜுடீன் கொலை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக, குற்ற விசாரணை திணைக்களத்திற்கு வருகைத்தருமாறு ஷிரந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டார். கடந்த ஜுலை மாதம் 27ஆம் திகதி வருகைத்தருமாறு அழைக்கப்பட்ட போதிலும் வர முடியாதென சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்திருந்தார்.
ஜுலை மாதம் 28ஆம் திகதி யோஷித ராஜபக்ஷவை குற்ற விசாரணை திணைகளத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் காலில் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ள காரணத்தினால் ஓய்வு பெற வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிட்டு வேறு திகதி ஒன்றை கோரியுள்ளார்.
எனினும் கடந்த 28ஆம் திகதி யோஷித மற்றும் நாமல் வைத்தியரின் பரிந்துரையை மீறி, அம்பாறைக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக ஷிரந்தி மற்றும் யோஷித கைது செய்யப்படும் அச்சத்திலேயே உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஷிரந்தி மற்றும் யோஷித ஆகிய இருவருக்கும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 14ஆம் திகதி குற்ற விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த நாட்களில் ஷிரந்தி ராஜபக்ச களனி விகாரையில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவில் இருந்து மந்திரவாதி ஒருவரை அழைத்து வந்து தாஜுடீன் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு எதிராக சூனியம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.