முன்னாள் ஜனாதிபதியும் அவரது கட்சியை சார்ந்தவர்களும் சிங்கள பௌத்த மக்களிடம் ஏனைய இன மக்கள் தொடர்பிலான தவறான பிரசாரங்களை மேற்கொண்டு இனங்களிடையே விரிசல்களையும் வன்முறைகளையும் ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வறு கூறியுள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
யுத்தத்தின் பின்னர் உங்களுக்கு சேவையாற்றுவதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
யுத்தத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் செய்யாத நிலையில் அவற்றினை மீண்டும் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன்.
கடந்த காலத்தில் இருந்த அரசாங்கம் சரியான வழியில் செல்லாத காரணத்தினால்தான் நான் புதிய கட்சியொன்றை ஆரம்பித்து அதன் மூலம் மக்களுக்கு உண்மையான நிலையினை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட்டு வந்தேன் எனவும் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச காலத்தில் சுதந்திரமாக செயற்படமுடியாத நிலையும் இருந்தது. இந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்சவின் ஆட்சி அதிகாரத்தினை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் புதிய ஆட்சியை ஏற்படுத்துவற்கான முனைப்புகளை 2015 ஆம் ஆண்டு மேற்கொண்டு வெற்றியடைந்தோம்.
பிரதான கட்சிகளுடன் போட்டியிட்டு புதிய கட்சியொன்றை கொண்டு செல்ல முடியாது என்பதை நான் நன்கு அறிவேன்.
கடந்த 2015ஆம் ஆண்டு நான் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தேன். எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இணைந்து ஒரு தேசிய ஆட்சி உருவாக்கப்பட்டு அனைவரும் இணைந்து ஆட்சியை நடாத்தி வருகின்றோம் எனவும் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் வடகிழக்கில் உள்ள மக்கள் ஒரு அச்ச சூழ்நிலையிலேயே இருந்து வந்தனர். சுயமாகவும் சுதந்திரமாகவும் செயற்பட முடியாத நிலையே மகிந்த ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு இருந்தது. மூன்று இன மக்களுக்கும் பழிவாங்கப்பட்டனர்.
ஆனால் அந்த நிலை இன்று மாற்றப்பட்டு, அனைத்து இன மக்களும் ஒன்றாக ஒரு குடும்பம் போல் வாழும் நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் சிறுபான்மை சமூகங்களும் அனுபவிக்க வேண்டும் என்பதை இந்த அரசாங்கம் நோக்காககொண்டு செயற்படுகின்றது.
இந்த நாட்டில் எதிர்காலத்தில் பிரிவினைகள் ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்கொண்டு செல்கின்றது. அனைத்து மதங்களும் ஒன்றாக கணிக்கப்படும் நிலை உருவாக்கப்படும்.
முன்னைய காலங்கள் இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர்.
எதிர்காலத்தில் நாம் இலங்கையர் என்று ஒரே குடையின் கீழ் வாழ்வதற்கான சந்தர்ப்பம் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து இன மக்களும் தங்களது கலாசார அடையாளங்களுடன் சுதந்திரமாக வாழும் சூழ்நிலை இந்த நாட்டில் இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அழகான இலங்கைத் தீவில் அனைவருக்கும் அழகான வாழ்க்கையினை அமைப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டினை அதளபாதாளத்துக்கு மீண்டும் கொண்டு செல்லும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை கட்சி பேதங்களுக்கு அப்பால் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து முறியடித்து நாட்டினை சீரான வழிக்கு கொண்டு செல்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதியும் அவரது கட்சியை சார்ந்தவர்களும் சிங்கள பௌத்த மக்களிடம் ஏனைய இன மக்கள் தொடர்பிலான தவறான பிரசாரங்களை மேற்கொண்டு இனங்களிடையே விரிசல்களையும் வன்முறைகளையும் ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய அரசியலமைப்பு ஊடாக இந்த நாட்டில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தவுள்ளோம். இதன் ஊடாக இந்த நாட்டினை கட்டியெழுப்ப முடியும் என நம்புகின்றோம்.
இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இதன்மூலம் மதவாதம், இனவாதங்கள் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படாது. அனைத்து பிரதேசங்களும் ஒரு நாடாக பரிணமிக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து இனங்களிலும் பிரச்சினைகளை உருவாக்கும் மனப்பாங்கு கொண்டவர்கள் உள்ளனர். சில அரசியல்வாதிகள் இவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேட முனைகின்றனர்.
இவ்வாறானவர்கள் புறந்தள்ளப்பட்டு அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.