அணு ஆயுத ஒழிப்பிற்கு உலகம் தீவிரமாக முயற்சிக்க வேண்டும்

உலகில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்பட அனைத்து நாடுகளும் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று ஐநா பொதுச் செயலர் குட்டரேஸ் வலியுறுத்தினார்.
un1
நியூயார்க்
தற்போது உலகம் முழுதும் சுமார் 15,000 அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறப்படும் சூழலில், “நமது அணு ஆயுதமற்ற உலகு எனும் கனவு யதார்த்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது” என்று கூறினார் ஐநாவின் பொதுச் செயலர்.
ஜப்பானின் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட 72 ஆவது நினைவு தினத்தையொட்டி அவர் சார்பாக விடுத்த செய்தியை அணு ஆயுத ஒழிப்புப் பிரிவின் உயர் பிரதிநிதி இசுமி நாகாமிட்சு வெளியிட்டார். ”அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளுக்கு அவற்றை ஒழிப்பதில் தனித்த பொறுப்புள்ளது என்பதையும் குட்டரேஸ் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.
ஹிரோஷிமா துன்பத்திலிருந்து மீண்டு,  அமைதியை நாடும் குறிக்கோளுடன் இருப்பது உலக நாடுகளுக்கு தூண்டுதலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் ஐநா சபையின் உறுப்பு நாடுகள் அணு ஆயுதத்தை தடுக்க தீர்மானம் நிறைவேற்றியதை எடுத்துரைத்தார் குட்டரேஸ். ஹிரோஷிமாவின் அணுகுண்டு வீச்சிலிருந்து தப்பித்தவர்கள் தொடர்ச்சியாக அதன் ஆபத்தை உணர்த்தும் பிரச்சாரத்தை நடத்தியதன் விளைவே இத்தீர்மானம் என்றும், இதன் மூலம் உலகம் அணு ஆயுதத்தை ஏற்கவில்லை என்பதை உணர்த்துவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நோக்கத்திற்கு உதவ ஐநா தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டம் உலகப்போரின் இறுதியில் ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அமெரிக்கா 1945 ஆம் ஆண்டு முறையே ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் வீசிய அணு குண்டுகளால் சுமார் 1,29,000 பேர் மரணமடைந்தனர். அதன் பிறகு வேறு போர்கள் எதிலும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை.