முன்னாள் போராளிகளுக்கு எதிராக நான் கருத்து தெரிவிக்கவில்லை – சீ.வி.விக்னேஸ்வரன்

அண்மைக்காலமாக யாழில் இடம்பெறும் குற்றச்செயல்களில் தான் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

cv-wigneswaran

போர்ப் பயிற்சி பெற்று இராணுவத்தினருடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டோரே என் கண்டனத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள். காரணமில்லாமல் முன்னாள் போராளிகளைப் பொலிசார் கைது செய்வதை கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வல்வை முத்துமாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வடக்கு முதல்வர் கருத்து வெளியிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நான் அண்மைக்காலங்களில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் குற்றம் இழைப்பது சம்பந்தமாக கருத்து வெளியிட்டேன். எமது விடுதலை வீரர்களை நான் குறிப்பிட்டதாக சிரேஸ்ட அரசியல்வாதிகள் கூட தமது கருத்துக்களை பிழையாக வெளியிட்டமை கவலைக்குரியது.

நான் புலிகள் இயக்கப் போராளிகள் பற்றிக் குறிப்பிடவில்லை. விடுதலைப் புலிகள் என்ற சொல்லே என்னால் பாவிக்கப்படவில்லை.

போர்ப் பயிற்சி பெற்று அரச படைகளுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டோரே என் கண்டனத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள்.

காரணமில்லாமல் முன்னைய போராளிகளைப் பொலிசார் கைது செய்வதையும் நாம் கண்டிக்கின்றோம். பயிற்சிகள் பெற்று விட்டு பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களையும் நாம் கண்டிக்கின்றோம்.

மேற்படி வன்முறைகளினால் அப்பாவி வயோதிபர்களும் குடும்பங்களும் உடல் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து நடைப்பிணங்களாக மாறியிருப்பதை எத்தனை இளைஞர்கள் உணர்ந்திருக்கின்றார்கள்? அவர்களின் சிந்தனைகளில் மாற்றம் வரவேண்டும். இளைஞர்கள் சற்று ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.