யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பாதுகாப்பு பிரிவு தற்போது வரையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இதுவரை நான்கு பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம், பொது மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சட்ட விரோதமாக மணல் கடத்தியமை, வாள் வெட்டுச் சம்பவம், கடற்படையினரோடு மோதலில் ஈடுபட்டமை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடிக்கும் நோக்கிலேயே பொலிஸாரும் அதிரடிப் படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குடாநாட்டின் ஆலயங்களில் இடம்பெறும் திருவிழாக்களின் போது பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையடிக்கும் நடவடிக்கை ஒன்றும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்களினால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர் பவனிகள் இடம்பெறும் போதும் ஏற்படும் நெரிசல்களை பயன்படுத்தி இவ்வாறு தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.