இந்தியப் பெருங்கடலில் சிறிலங்காவில் கேந்திர அமைவிடத்தை, சீனா தனது மூலோபாய மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாது என்று, சிறிலங்காவுக்கான சீன தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ஹெபிங்பாங்சோவை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே சிறிலங்கா மூலோபாய அமைவிட வாய்ப்பை அனுபவித்து வருகிறது. அதற்குக் காரணம், பட்டுப் பாதையின் நடுவில் இலங்கைத் தீவு இருப்பதேயாகும்.
உங்களின் முக்கியத்துவத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள்? உங்களிடம் உள்ள இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்ளப்போகிறீர்கள்? என்ற கேள்விகள் இருக்கின்றன.
இதற்கான பிரதான பதில், அமைதி மற்றும் அபிவிருத்தியாகவே இருக்கிறது. சிறிலங்காவில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு முயற்சிகள் ஒவ்வொன்றுக்கும் சீனா ஆதரவாக இருக்கும்.
இது சிறிலங்கா மக்களின் தேவை. இந்த வாய்ப்பை, எமது மூலோபாய மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளமாட்டோம்.
சிறிலங்காவின் அபிவிருத்திக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். கடந்த காலத்தில் சிறிலங்காவில் சீனா என்ன செய்திருக்கிறது என்று நீங்களே, ஆய்வு செய்ய முடியும்.
நாங்கள் மருத்துவமனைகளை, விமான நிலையம், துறைமுகம் போன்ற உட்கட்டமைப்புகளை கட்டியுள்ளோம். சீனாவிடம் இருந்து மிகப் பெரிய கொடைகளையும் நிதி உதவிகளையும் பெற்ற முதல் நாடு சிறிலங்கா தான்.
சிறிலங்காவில் நாம் எந்தவொரு கடற்படை வீரர்களையோ, ஏனைய படையினரையோ நிறுத்தி வைத்திருக்கவில்லை. சிறிலங்காவில் நாம் புலனாய்வாளர்களையும் கொண்டிருக்கவில்லை. இங்குள்ள சீன இராஜதந்திரிகளைத் தவிர, வேறு அத்தகையவர்கள் யாரையும் நாம் கொண்டிருக்கவில்லை. சீனாவின் பிரதிநிதியாக நானே இருக்கிறேன்.
ஆனால், பல பிரதம நிறைவேற்று அதிகாரிகள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், பேராசிரியர்களை நாம் இங்கு வைத்திருக்கிறோம். அவர்கள் இங்கு என்ன செய்கிறார்கள்? சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறார்கள். இந்த நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக பணியாற்றுகின்றனர்.
நாங்கள் எதைக் கூறினோமோ அந்த வாக்குறுதிகளை நாம் காப்பாற்றுகிறோம். எனவே நாங்கள் சிறிலங்காவின் உண்மையான நண்பர்கள் என்பதை நம்புங்கள்” என்றும் அவர் கூறினார்.