இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது
இதன் முதற்கட்டமாக வறட்சியால் பாதிக்கப்பட்ட பத்தொன்பது மாவட்டங்களில் வாழும் 341,411 குடும்பங்களுக்கு வறட்சி நிவாரண நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இக்குடும்பங்களின் அங்கத்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,189,223 பேர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வறட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வீதம் நிதியுதவி வழங்கப்படவுள்ளதுடன், அதனை இரண்டு தவணைகளில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாணம், வடமாகாணத்தின் சில பிரதேசங்கள் மற்றும் ஊவாவின் மொனராகலை உள்ளிட்ட பகுதிகளை விட குருநாகல் மாவட்டத்தில் வறட்சியின் தாக்கம் அதிகமாக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய தரவுகள் தெரிவிக்கின்றன.
அனர்த்த முகாமைத்துவ சேவைகள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவின் சொந்த மாவட்டம் என்ற வகையில் குறித்த மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்குவதன் ஊடாக வாக்குகளுக்கு இலக்கு வைக்கும் நிவாரண செயற்திட்டம் காரணமாக வறட்சியால் உண்மையாகவே பாதிக்கப்பட்டுள்ள ஏனைய மாவட்ட மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிருப்தி பொதுமக்கள் மத்தியில் பரவத் தொடங்கியுள்ளது.
வறட்சியால் குடிநீர் இன்றி இறக்கும் வன விலங்குகள்
நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக காடுகளில் வாழும் விலங்குகள் உயிரிழந்து வருகின்றன.
புத்தளம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக மக்கள் மாத்திரமல்லாது காட்டு விலங்குகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தப்போவ வனவிலங்கு சரணாலயத்தை அண்டிய பகுதியில் இருக்கும் மீகஸ்வெவ குளம் மற்றும் ஏனைய நீர் நிலைகளில் தண்ணீர் வற்றியுள்ளது.
தண்ணீர் இன்றி தாகத்துடன் சுற்றித் திரிந்த குரங்குகள், நட்சத்திர ஆமைகள், பால் ஆமைகள், குருவிகள், மறை மான்கள் என பல விலங்குகள் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.