ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட சுமார் 40 பில்லியன் யூரோ செலுத்த பிரித்தானியா தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பின நாடாக திகழ்ந்த பிரித்தானியா, கடந்தாண்டு எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் பிரித்தானியா தனி நாடாக பிரிய வேண்டும் என அந்நாட்டு பொதுமக்கள் வாக்களித்தனர்.
இதனை தொடர்ந்து பிரித்தானிய பொருளாதாரத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்படாதவாறு பிரிந்து செல்வதற்கான பேச்சு வார்த்தை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதே சமயம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகினால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட பிரித்தானியா ஒரு குறிப்பிட்ட தொகையை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைக்கு அளிக்க வேண்டும்.
பிரித்தானியா எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
ஃபினான்சியல் டைம்ஸ் வெளியிட்ட புள்ளி விபரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகினால் ஏற்படும் வருடாந்திர இழப்புகளை சமாளிக்க சுமார் 100 பில்லியன் யூரோ வரை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மற்றொரு முக்கிய பத்திரிகை வெளியிட்ட புள்ளி விபரத்தில் 82 முதல் 109 பில்லியன் யூரோ வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும், இத்தொகையை தவணை முறையில் பல ஆண்டுகளுக்கு செலுத்த நேரிடலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானியா எதற்காக இத்தொகையை செலுத்த வேண்டும்?
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 28 நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை(பில்லியன்களில்) ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டும்.
இந்த தொகையை பெறும் ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து உறுப்பின நாடுகளின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தும். மேலும், உறுப்பின நாடுகள் தங்களுடைய நாடுகளின் வளர்ச்சிக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கடனும் பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக உள்ளதால், வருடந்தோறும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய தொகை நிறுத்தப்படும் என்பதால் அதனை ஈடுக்கட்ட ஒரு தொகையை நிர்ணயம் செய்து பிரித்தானிய அரசிடம் இருந்து வசூலிக்கப்படும்.
இந்த தொகையை தான் செலுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி வருகிறது.
பிரித்தானியா இத்தொகையை செலுத்த தயாரா?
பிரித்தானிய பத்திரிகைகள் வெளியிட்டுள்ள தகவலில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு குறிப்பிட்ட தொகையை அளிக்க பிரித்தானியா தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், 100 பில்லியன் யூரோ செலுத்த முடியாது என பிரித்தானியா மறுத்துள்ளது. இதற்கு மாறாக, பிற ஐரோப்பிய நாடுகளில் சுதந்திரமாக வர்த்தகம் செய்யும் அனுமதி கிடைத்தால் சுமார் 40 பில்லியன் யூரோவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்த பிரித்தானியா தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொகையை செலுத்த தவறினால் என்ன விளைவு ஏற்படும்?
ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ள தொகையை பிரித்தானியா செலுத்த மறுப்பு தெரிவித்தால், அனைத்து ஐரோப்பிய நாடுகளின் ஆதாரவினை பிரித்தானியா இழக்க நேரிடும்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான Jean Claude Juncker என்பவர் சமீபத்தில் பேசியபோது, ‘பிரித்தானியா தொகையை செலுத்த மறுத்தால், பிற ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பை இழக்க நேரிடும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது போன்ற ஒரு சூழல் ஏற்பட்டால் பல ஆண்டுகளுக்கு ஈடுகட்ட முடியாது பொருளாதார இழப்பை பிரித்தானியா சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.