அரசியல் கைதிகளை நிபந்தனைகள் எதுவுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நாளைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பேருந்து நிலையம், வவுனியா, கிளிநொச்சி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களிற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புத் தனது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் க. ஆனந்தகுமாரசாமி, இணைச் செயலாளர்கள் ச. தனுஜன், அ. சீவரத்தினம் ஆகியோர் இணைந்து இன்று திங்கட்கிழமை (07) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தடுப்புக்காவலில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளான டில்ருக்ஷன், நிமலரூபன் ஆகியோரின் ஐந்தாவது நினைவு தினமான நாளைய தினம் யாழ்ப்பாணப் பேருந்து நிலையம், வவுனியா, கிளிநொச்சி ஆகிய இடங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளது.
அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற வகையில் உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்கிக் கொள்ளக் கோரியும் தொடர்ச்சியாக நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
இந்த நிலையில் 08.08.2017 இல் இடம்பெறுகின்ற கவனயீர்ப்புப் போராட்டங்களில் அனைத்து மக்களையும் கலந்து கொண்டு சமூக அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க அணிதிரளுமாறு அழைத்து நிற்கின்றோம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.