சிறுபிள்ளைகளிடம் எதிர்காலத்தில் யாரைப் போல வர வேண்டும் என்று கேள்யெழுப்பினால் காந்தி என்றோ பிரபாகரன் என்றோ அவர்கள் கூற மாட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாறாக தனது அக்கா, அண்ணாவை போன்று வர வேண்டும் என்றே கூறுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வாழ்க்கையில் எமக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். அதனை அடைவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எமது குறுகிய கால குறிக்கோளை அடைந்து விட்டால் போதுமென்று ஓய்ந்து விடாது. அந்நிலையில் இருந்து அடுத்தபடியை நோக்கி முன்னேற முயற்சிக்க வேண்டும். இவ்வாறான தொடர் முயற்சிகள் பல வெற்றிகளை எமக்கு அளிக்கும்.
யாரைப்போல வர ஆசைப்படுகின்றீர்கள் என்று நான் சிறுபிள்ளைகளிடம் கேட்பதுண்டு. காந்தி என்றோ பிரபாகரன் என்றோ அவர்கள் கூற மாட்டார்கள். மாறாக தன்னுடைய அண்ணன் மாதிரி அக்கா மாதிரி என்றுதான் கூறுவார்கள்.
க.பொ.த சாதாரண தரத்தில் கூட முறையாக தேர்ச்சி அடையாத பலர் அரச வேலைகளைத் தேடி வருகின்றார்கள். கல்வியின் முக்கியத்துவம் அவர்களால் உணரப்படுவதில்லை.
எவ்வழியிலாவது பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவர்களுக்கிடையே மேலோங்கியிருப்பதை நான் காண்கின்றேன். வாழ்க்கையில் இலக்கற்று வாழ்கின்றார்கள். அவர்கள் கூட முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.
எமது பெண்கள் பல தொழில்களில் தம்மை ஈடுபடுத்த முன்வர வேண்டும். தாதியர் தொழில், காவல்துறை, உணவகத்துறை, சுற்றுலாத்துறை போன்றவற்றில் தகுதி பொருந்திய பெண்களுக்கு இப்பொழுதும் வெற்றிடங்கள் பல உண்டு என அவர் மேலும் கூறியுள்ளார்.