நான்காம் புவனேகபாகு மன்னனால் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கையின் அம்புலுவாவ சிகரம்!

உலகில் மிகப்பெரியதும் அதிக மக்கள் தொகையையும் கொண்டதாக ஆசியா கண்டம் காணப்படுகின்றது. இந்த ஆசியா கண்டத்திற்குள் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு ஒரு தனிச் சிறப்பு காணப்படுகின்றது.

இலங்கை ஒரு குட்டித்தீவாயினும் இங்கு கொட்டிக்கிடக்கும் ஆச்சரியங்கள் எண்ணற்றவை. இயற்கையாகவே தனக்கென விசேடத்துவத்தை இலங்கை கொண்டுள்ளது.

1

 

சர்வதேச நாடுகளில் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கென ஒரு தனி இடம் காணப்படுவது இயற்கையாக பல சுற்றுலாத்தலங்கள் அமைந்திருப்பதன் காரணமாகத்தான்.

அந்த வகையில், இலங்கையில் அமைந்திருக்கக்கூடிய அம்புலுவாவ சிகரம் இவ்வாறான சிறப்புக்குரிய ஒன்றாக காணப்படுகின்றது.

இயற்கை எழில் கொஞ்சும் மத்திய மலைநாட்டில் கம்பளை பிரதேசத்தில் குறித்த சிகரம் காணப்படுகின்றது.

2

14ஆம் நூற்றாண்டில் சிங்கள மன்னன் நான்காம் புவனேகபாகு மன்னனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாறை மற்றும் மலைத்தொடர்தான் இந்த அம்புலுவாவ மலைச்சிகரம்.

பல்லுயிர் வளங்களைக்கொண்ட இயற்கை மையமாகவும் திகழும் இந்த மலைச்சிகரம் 365 அடி உயரத்திலும் கம்பளை நகரிலிருந்து நான்கு கிலோ மீற்றர் தொலைவிலும் காணப்படுகின்றது.

குறித்த மலைப்பகுதியில் அனைத்து மதஸ்தலங்களும் ஒருங்கே காணப்படுவது சிறப்பம்சமாகும். இதனால் இது ஒரு மதஸ்தலமாகவும் சிறப்பிக்கப்படுகின்றது.

3

இந்த மலைச்சிகரத்தின் முழுப்பகுதியும் பசுமையான காடுகளைக் கொண்டு காணப்படுவதோடு இதில் 80 வகையான தாவர குடும்பங்களும், 200 தாவர வகைகளும் காணப்படுகின்றன.

அம்புலுவாவ மலைச்சிகரமானது கிழக்கில் இலங்கையின் மிக உயரமான பீதுருதாலகால மலையினாலும், மேற்குப்பகுதியில் சிவனொளிபாத மலையினாலும் மற்றும் வடகிழக்கில் நக்கில்ஸ் மலைத்தொடராலும் சூழப்பட்டுள்ளது.

4

இந்த மலைச்சிகரத்தினைச் சுற்றி சிறிய சிறிய மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களும், இயற்கை வனங்களும், நீர்நிலைகளும் இந்த பிரதேசத்திற்கே உரிய அழகினை வெளிப்படுத்துவதாய் அமைகின்றன.

அழகிய நுழைவாயில், இரட்டைக்குளங்கள் மற்றும் தாவர பூங்காக்கள் ஆகியன இந்த மலைச்சிகரத்தின் தனித்துவமான அம்சங்களை பிரதிபலிப்பதோடு விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான பழத்தோட்டங்களை உள்ளடக்கியதாகவும் குறித்த மலைத்தொடர் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

5

மலையுச்சியிலிருந்து பார்க்கும் போது கம்பளை நகரின் முழுத்தோற்றத்தையும் ஒருங்கே காணமுடியும். அத்தோடு இந்த மலைச்சிகரத்தில் சுற்றித்திரியும் மான்கள் பார்ப்பவர்களின் கண்ணுக்கு விருந்தளிப்பதாய் அமையும்.

குளிரான காலப்பகுதியில் இந்த அம்புலுவாவ மலைச்சிகரம் பனியால் மூடப்பட்டு மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு காட்சியளிக்கும் தோற்றம் எண்ணற்ற அழகினைக் கொண்டது எனலாம்.

இந்த அம்புலுவாவ மலைச்சிகரத்தின் அழகினை மேலும் வலுப்படுத்துவது அம்புலுவாவ மலைச்சிகரத்தில் உள்ள உருளை அடித்தளத்துடன் கூடிய தூபியும், கவனிப்பு கோபுரமும் தான்.

6

இங்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்ப்பதும், கம்பளை நகரின் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் கண்ணுக்கு புலப்படுவதும் இந்த அம்புலுவாவ தூபியும் கவனிப்பு கோபுரமும் தான்.

அம்புலுவாவ மலையுச்சியில் அமைந்திருக்கக்கூடிய புத்தர்சிலை அங்கு செல்லும் அனைவரது கவனத்தையும் தன்னகத்தே ஈர்க்கும் சிறப்பைக்கொண்டது. இயற்கையாக பனிமூட்டத்துடன் காணப்படும் இந்த மலைச்சிகரத்தின் உச்சியில் புத்தர்சிலை காணப்படுவது அந்த இடத்தை மேலும் மெருகூட்டுவதாய் அமைகின்றது.

மத்தியமலை நாட்டிற்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள எண்ணுவோரும், இயற்கை பிரியர்களும் இவ்வாறான இடங்களை தவறவிடாமல் சென்று பார்வையிடுவது புதிய அனுபவத்தை தருவதோடு வாழ்நாளில் மீண்டும் ஒரு முறை மீட்டுப்பார்க்கும் வகையில் சுவாரஷ்யமானதும், ரம்மியமானதும் ஒரு அனுபவத்தை தரும் என்பது மறுக்க முடியாததே.

7