வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்திய நடிகர்கள் உள்ளிட்ட 20 பேரின் தகவல்களை வெளியிட தயார் என முன்னாள் சுவிஸ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரிச் மாகாணத்திற்கு அருகில் உள்ள Rorbas என்ற கிராமத்தில் Rudolf M. Elmer என்பவர் வசித்து வருகிறார்.
இவர் சுவிஸில் உள்ள Julius Baer என்ற வங்கியில் உயர் அதிகாரியாக 8 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார்.
ஆனால், வரி ஏய்ப்பு செய்த வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களை விக்கி லீக்ஸ் நிறுவனத்திடம் பகிர்ந்துக்கொண்ட குற்றத்திற்காக கடந்த 2002-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், இவருக்கு 200 நாட்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
சிறை தண்டனை அனுபவித்த பின்னர் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு மாபெரும் விடயத்தை கையில் எடுத்துக்கொண்டு போராடி வருகிறார்.
சுவிஸ் வங்கி நடைமுறையில் உள்ள கடுமையான விதிமுறைகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராடி வருகிறார்.
இதுக் குறித்து அண்மையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது ‘சுவிஸ் மத்திய அரசும், நீதிமன்றமும் அனுமதி அளித்தால் பல ரகசிய தகவல்களை வெளியிடுவேன்.
குறிப்பாக, Julius Baer வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியாவை சேர்ந்த நடிகர்கள், அரசியல்வாதிகள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 20 பேரின் தகவல்களை வெளியிட தயார்’ என தெரிவித்துள்ளார்.
தற்போது இது தொடர்பான கோரிக்கை மனுவை சுவிஸ் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து வருவதாகவும் Rudolf M. Elmer தெரிவித்துள்ளார்.
சுவிஸில் கணக்கு வைத்துள்ள இந்திய நடிகர்கள் உள்ளிட்ட 20 பேரின் தகவல்களை வெளியிடுவேன் என முன்னாள் சுவிஸ் வங்கி அதிகாரி கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.