தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவிற்கு வழி சமைத்து கொடுத்த தமிழரசு கட்சியினை வன்மையாக கண்டிப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாடு இன்றைய தினம் யாழ். நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் போது சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்போதே கண்டனமும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் குறித்த மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன,
தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் வன்முறையின்றி பேச்சுவார்த்தை மூலமும், இணக்கப்பாட்டுடனும், சமாதானமாகவும் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களையும், 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது இடம்பெயர்ந்து தமிழகம் சென்ற தமிழ் மக்களையும் மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் குடியேற்றி அவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் வாழும் ஏனைய இன மக்களாகிய சிங்களவர், முஸ்லீம்கள், மலாயர் போன்ற பல்வேறு இன, மத குழுக்களுடன் நல்லுறவை பேணுவதோடு இலங்கை வாழ் அனைத்து மக்களும் சமமாகவும் அவர்களுடைய ஜனநாயக, மனிதாபிமான சகல அடிப்படை உரிமைகளையும் அனுபவிக்க உத்தரவாதமளிக்க வேண்டும்.
நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல தமிழ் அரசியல் கைதிகள் பரிதாபமான நிலையை கருத்திற்கொண்டு அவர்கள் நிபந்தனையின்றி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதோடு அவர்களின் எதிர்கால வாழ்வாதாரப் பிரச்சினையையும் கருத்திற் கொண்டு அதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்டு பல வழிகளாலும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் விதவைகளுக்கும் மற்றும் அவயவங்களை இழந்து இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு நிரந்தர வருமானத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டங்களை உருவாக்கி அவர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது.
அத்துடன் இவர்களுக்கு கூப்பன் வழங்கி இலவசமாக அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளவும், நியாயமான விலையிலோ, மானிய அடிப்படையிலோ வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் வாழும் மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி அவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக தமிழக மீனவர்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த விடயத்தை இராஜதந்திர ரீதியிலும், சாணக்கியத்துடனும் செயற்பட்டு ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க இரு தரப்பினரும் முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறது.
படித்த இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தி அவர்களின் விரக்தியான மன நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரிடமும் தமிழர் விடுதலைக் கூட்டணி வினயமாக வேண்டுவதோடு வேலை வாய்ப்புக்களை பெற முடியாதவர்கள் சுய தொழிலை மேற்கொள்ள பொருளாதார நிதியுதவிகளை அரசாங்கம் வழங்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டுக்கொள்கிறது.
வடமாகாண சபை தங்களுக்குள் உள்ள மோதல் போக்குகளை கைவிட்டு மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தீவிர கவனம் எடுக்க வேண்டுமெனவும், குறிப்பாக வைப்பிலுள்ள நிதிகளை சரியாக பயன்படுத்தி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறது.
தமிழத் தேசியக் கூட்டமைப்பு தமக்கு தமிழ் மக்களின் பிரச்சினை சம்மந்தமாக ஒரு பாரிய பொறுப்பு இருப்பதை உணர்ந்து, தன்னிச்சையாக ஒரு குறிப்பிட்ட கட்சியினை மட்டும் முதன்மைப்படுத்தி செயற்படுவதை தவிர்த்து அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி ஒரு நிரந்தர தீர்வினைப் பெற்றுத்தர முன்னின்று செயற்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறைபாடுகளை நன்கு அறிந்தும், தமிழ் மக்களின் நலன்கருதி அவர்களுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக பல தடவைகள் எடுத்துரைத்த போதும் தங்களின் சுயநல நோக்கத்தோடு அதை தட்டிக்கழித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கையை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பூர்வீகத்தை திரிபுபடுத்தி அந்த பெயரை உச்சரித்து, தமிழ் மக்களையும் ஏமாற்றி தங்கள் சுயநல அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்களே.
தனியார் காணிகளை உரியவர்களிடம் கையளிப்பது மட்டுமன்றி இராணுவத்தால் பெருமளவு கையப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தேவைக்கேற்ப சிறு பகுதியை மட்டும் விட்டு ஏனையவற்றை அரசாங்கம் கையப்படுத்த வேண்டும்
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை துஷ்பிரயோகம் செய்து தமிழ் மக்களின் போராட்டங்களை மழுங்கடித்து, ஐக்கியமாக செயற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையையும் சீர்குலைத்து 2004ம் ஆண்டு, வடக்கு கிழக்கில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புக்கள், தராக்கி, விடுதலைப் புலிகள் ஆகியோர் இணைந்து ஒரு குடையின் கீழ் ஒரே கொள்கை, ஒரே சின்னம் என்ற அடிப்படையில் தேர்தலில் போட்டியிட மேற்கொண்ட முயற்சியினையும் முறியடித்த தமிழரசு கட்சியின் நடவடிக்கையை கண்டித்துள்ளது.
28 ஆண்டுகளாக இயங்காமல் முடக்கி வைக்கப்பட்டிருந்த தமிழரசு கட்சியை எவருடைய சம்மதமின்றி சம்பந்தமில்லாத ஒருவரின் வற்புறுத்தலுக்கு இணங்க தமிழரசு கட்சியின் சின்னத்தில் 2004ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்து, முடிவுக்கு வரவிருந்த யுத்தம் ஐந்து ஆண்டுகள் நீடிக்கவும், பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரழிவுக்கு காரணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு வழிசமைத்துக் கொடுத்த தமிழரசுக் கட்சி தலைமையை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிப்பதோடு அவ்வாறான பேரனர்த்தத்துக்கு தமிழரசுக் கட்சியே பொறுப்பேற்க வேண்டும்.
இராணுவம் கையகப்படுத்திய பொது மக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிக்க வேண்டுமென அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, வாழைச்சேனை காகித ஆலை ஆனையிறவு உப்பளம் போன்றவற்றை மீண்டும் இயங்கச் செய்து வேலை வாய்ப்பினை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பொலிஸ், நிர்வாகச்சேவை போன்றவற்றுக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது குறைந்த பட்சம் மூவின மக்களின் விகிதாசாரத்துக்கு ஏற்றவாறு அவர்களுக்கு நியமனங்கள் வழங்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சரியோ பிழையோ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களாவர். அவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்க்கை கொண்டு நடத்துகின்றனர். சில அசம்பாவிதங்கள் நடக்கின்ற வேளைகளில் சந்தேகத்தின் பேரில் இவ்வாறனவர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஐந்து இளைஞர்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் ஒரு கையை இழந்தவராவார். இரண்டாமவர் தனது கை ஒன்றில் மணிக்கட்டுக்கு கீழ் பகுதியை இழந்தவர். மூன்றாமவர் சில வருடங்களுக்கு முன்பு சுயநினைவு இல்லாமல் மூன்று மாத காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவராவார்.
இந்த இளைஞர்கள் குற்றமற்றவர்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுவதால் அரசாங்கம் இது சம்பந்தமாக விசாரணை செய்யுமாறு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிர்வாக செயலாளர் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் கே.விந்தன் கனகரட்ணம் சிறி ரெலோவின் தலைவர் உதயராசா மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.