முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வரன் படுகொலை தொடர்பான தகவல்களை மூடி மறைத்த குற்றச்சாட்டினை ஏற்றுக் கொண்டு சிறைத்தண்டனை அனுபவித்த நபர், இராணுவ உளவாளிகள் இருவரைக் கொலை செய்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை வழங்கிய இராணுவ உளவாளிகள் இரண்டு பேரை சுட்டுக் கொல்வதற்கு உதவியதாக குற்றம் சுமத்தி தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து குறித்த நபரை, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க விடுதலை செய்துள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் சுமத்தப்பட்டிருந்த குற்றப்பத்திரிகை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாரங்க வெதசிங்க விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆறுமுகம் அருள் எனப்படும் திருச்செல்வம் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவிற்குள் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் முன்னிலையில் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் சுயாதீனமான முறையில் வழங்கப்படவில்லை என, சாட்சி விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது.
இதனால் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை சந்தேக நபருக்கு எதிரான சாட்சியாக பயன்படுத்த முடியாது என நீதிமன்றம் அறிவித்திருந்தது.
2004ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய உளவுத் தகவல்களை வழங்கிய திஸ்ஸ வீரசிங்கம் மற்றும் இலிப்பன்கே ரங்கப்பா ஆகியோர் கொலை செய்யப்படுவதற்கு உதவியதாக திருச்செல்வம் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை சட்ட மா அதிபர் திணைக்களம் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட உள்ளமை குறித்த தகவல்கள் தெரிந்தும் அது பற்றி பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட திருச்செல்வத்திற்கு ஓராண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.