கனடாவில் தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்த அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் கடை ஒன்றில் திருட சென்ற இளைஞர் ஒருவருக்கு டொரொன்டோவில் உள்ள தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் மறு வாழ்வு அளித்துள்ளார்.
தேர்முக தேர்வுக்கு செல்லும் நோக்கில் ஆடை திருட கடையொன்றுக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த பொலிஸ் அதிகாரி அந்த திருடனுக்கு ஆடை கொள்வனவு செய்து கொடுத்துள்ளதுடன் வாழ்க்கைக்கான இரண்டாவது சந்தர்ப்பத்தையும் வழங்கியுள்ளார்.
Jane தெருவில் உள்ள Walmart அங்காடியில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக குறித்த தமிழ் பொலிஸ் அதிகாரி நிரன் ஜெயநேசன் மற்றும் அவரது நண்பருக்கு ஞாயிற்றுகிழமை இரவு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற போது 18 வயதுடைய இளைஞர் ஆடைகள் சிலவற்றை திருடியிருந்தார் என்பது தனக்கு தெரியவந்ததாக பொலிஸ் அதிகாரி நிரன் ஜெயநேசன் கனேடிய ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கடைக்காரருடன் பேசிய பின்னர் குறித்த இளைஞர் தொழிலுக்கான நேர்முக தேர்விற்கு செல்வதற்காக ஆடை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இளைஞன் வாழ்க்கையில் தனது சொந்தக் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றார். தனக்கு வேலை கிடைப்பதன் ஊடாக குடும்பத்திற்கு உதவ முயல்கிறார் என ஜெயநேசன் தெரிவித்துள்ளார்.
கடைக்காரரிடம் இருந்து இளைஞனை விடுவித்த பொலிஸ் அதிகாரி அந்த இளைஞனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாமல் நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்காக ஆடை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த இளைஞனுக்கு வேறு எந்த ஒரு தனிப்பட்ட நோக்கமும் கிடையாதென ஜெயநேசன் குறிப்பிட்டுள்ளார்.
அந்த இளைஞனுக்கு வேலை கிடைக்க வேண்டும். அது மாத்திரமே எனது மனதில் இருந்தது. அவர் உண்மையாகவே தவறு செய்துள்ளார் என்று நான் நினைக்கின்றேன் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த பொலிஸ் அதிகாரியின் செயலை பார்த்து மற்றொரு பொலிஸ் அதிகாரி அவரை வெகுவாக பாராட்டியுள்ளார். “ஜெயநேசன் ஒரு சிறப்பான செயலை செய்துள்ளார். அவருக்கு அந்த உதவியில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் கிடையாது. சிறப்பான ஒரு மனிதாபிமானத்தை இங்கு பார்க்க முடிந்தது. அந்த பொலிஸ் அதிகாரி ஒரு எடுத்துக்காட்டாக காணப்பட்டார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.