நீதிபதி இளஞ்செழியனை குறிவைத்தவர் அடையாளம் காணப்பட்டார்!

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Judge

யாழ். நீதவான் நீதிமன்றில், நீதவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ். நல்லூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி நடத்தப்பட்ட மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்தில், நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்ததோடு, மற்றுமொரு உத்தியோகத்தர் காயமடைந்தார்.

சம்பவம் தொடர்பில், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த செல்வராசா ஜயந்தன் என்பவர், கடந்த மாதம் 25ஆம் திகதி யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், நீதிபதி இளஞ்செழியனின் வாகன சாரதி, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சம்பவத்தின் போது அங்கு தரித்து நின்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் ஆகியோர் சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளனர்.