யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை ஆனந்த தேரர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
முன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று அழைக்கப்படும் ஆனந்த தேரர் நீதிபதியின் மனிதாபிமான செயற்பாடுகள் குறித்து அவருடன் கலந்துரையாடியதுடன் நினைவுப்பரிசு ஒன்றையும் வழங்கி வைத்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி நல்லூரில் யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தாருக்கு நீதிபதி மற்றும் அவரது நண்பர்கள் செய்துவரும் உதவிகள், மற்றும் மெய்ப்பாதுகாவலரின் மனைவியின் காலில் விழுந்து அழுது நீதிபதி தன்னுடைய கவலையை வெளியிட்டமை தொடர்பில் கடந்த காலங்களில் பலராலும் பேசப்பட்டு வந்த விடயமாகும்.
இந்த நிலையில் ஆனந்த தேரரும் நீதிபதியின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து அவரை சந்தித்து பேசியுள்ளார்.
இதேவேளை நீதிபதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் நபர் பொலிஸில் சரணடைந்ததுடன், அவருக்கு இன்றைய தினம் (ஆகஸ்ட் 8ஆம் திகதி) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.