மாணவர்களின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிணை மனு மறுப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் பிணை மனுவை, யாழ். மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

police1

மாணவர்களின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் சார்பில் பிணை மனு, நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இக் கொலை தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால் பிணை வழங்க முடியாதென குறிப்பிட்ட நீதிபதி இளஞ்செழியன், பிணை கோரல் மனுவை நிராகரித்துள்ளார். அத்தோடு, சந்தேகநபர்கள் ஐவரையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த கஜன் மற்றும் சுலக்ஷன் எனும் இரு மாணவர்கள், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி பிரதேசத்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குறித்த சம்பவத்தை விபத்தென பொலிஸார் சோடித்திருந்தாலும், கஜனின் உடலில் துப்பாக்கிச்சூட்டு காயம் காணப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதியாகியதையடுத்து சம்பவ நேரத்தில் கடமையில் இருந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர். அத்தோடு, கஜன் சுட்டுக்கொல்லப்பட்டதை நேரில் கண்டதால், சுலக்ஷன் அடித்துக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.