சுதந்திர இலங்கையின் சுமார் ஏழு தசாப்த கால வரலாற்றை புரட்டிப் பார்ப்போமானால் ஊழல் மோசடிகளில் குற்றம் சுமத்தப்படாத, கறைபடியாத கரங்களையுடைய அரசியல்வாதிகளாக குறிப்பிட்டுக் கூறக் கூடியவர்களாக கணிசமானோர் உள்ளனர். இவ்வாறானோர் அரசியலை தங்களது சொந்தப் பிழைப்புக்காக தேர்ந்தெடுக்காதவர்களாவர்.
தமது குடும்ப வாரிசுகளின் எதிர்காலத்துக்காக சொத்துச் சேர்க்க வேண்டுமென்ற எண்ணமும் இவ்வாறான அரசியல்வாதிகளிடம் இருந்ததில்லை. இவர்களை இலங்கையின் வரலாறு இன்றும் கூட பெருமையுடன் நினைவு கூர்ந்து கொண்டேயிருக்கின்றது.
ஊழல் முறைகேடுகளில் சற்றேனும் சம்பந்தப்படாதவரென பேர் பெற்ற அரசியல்வாதிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவராகக் காணப்படுகின்றார். எனவேதான் இலங்கையின் அரசியலில் ரணில் விக்கிரமசிங்கவை ‘மிஸ்டர் கிளீன்’ என்று பலரும் குறிப்பிடுவதுண்டு.
இலங்கையின் கடந்த கால அரசாங்கங்களை எடுத்து நோக்கும் போது, கணக்கிட முடியாத ஊழல் முறைகேடுகள் இடம்பெற்ற காலப் பகுதியாக மஹிந்த ராஜபக்சவின் பத்து வருட கால ஆட்சிப் பகுதியையே பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு.
லஞ்சம், பணமோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், குடும்ப ஆதிக்கம், அரச வளங்களின் வீண் விரயம் என்றெல்லாம் அன்றைய பத்து வருட கால ராஜபக்சாக்களின் ஆட்சியை ஊடகங்களெல்லாம் இதுவரை முழுமையாக பட்டியலிட்டுக் காண்பித்து விட்டன.
அரசியல் அதிகாரத்தில் வீற்றிருந்த ராஜபக்ச குடும்பத்தினர் மாத்திரமன்றி, அவர்களது உறவினர்கள் பலரும் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி நடத்திய ஊழல் முறைகேடுகளையும், சொத்துக் குவிப்புகளையும் ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டன.
இலங்கையில் ஒரு தசாப்த காலமாக ஒரு குடும்பத்தினர் சர்வாதிகாரத் தனத்துடன் நடத்திய கொடுங்கோன்மை ஆட்சியே அதுவென்று பொதுவாகவே விமர்சிக்கப்பட்டமை புதுமையான செய்தியல்ல.
கடந்த 2015 ஜனவரியில் ராஜபக்சாக்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நாட்டின் சிறுபான்மையின மக்கள் தீர்மானித்தமைக்கு வேறுசில காரணங்களும் இருந்த போதிலும், பெரும்பான்மையின சிங்கள மக்களில் கணிசமானோர் மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்தமைக்கான காரணம் ஊழல் முறைகேடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்துக்கு எதிராக நாட்டிலுள்ள புத்திஜீவிகளெல்லாம் அன்றைய வேளையில் ஒன்று திரண்டிருந்தனர். அதிகார துஷ்பிரயோகங்களாலும் ஊழல் முறைகேடுகளாலும் நாட்டுக்கு எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற பேராபத்து குறித்து மக்களுக்கு புத்திஜீவிகள் எச்சரிக்கை செய்தனர்.
சிங்கள மக்களில் உள்ள சிந்திக்கத் தெரிந்த தரப்பினரின் ஒன்றுபட்ட முடிவினாலேயே மஹிந்தவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர முடிந்தது.ஆனாலும், நல்லாட்சியைக் கொண்டு வருவது மாத்திரமே மக்களின் நோக்கமாக இருந்ததில்லை.
ராஜபக்சாக்களின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றுள்ள அத்தனை முறைகேடுகளும் விசாரணை செய்யப்பட்டு அம்முறைகேடுகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படுவதுடன், குற்றத்தில் சம்பந்தப்பட்டோர் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் மக்கள் விரும்பினார்கள்.
அன்றைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய குற்றங்களுக்குப் பொறுப்பானோர் உரியபடி தண்டிக்கப்பட வேண்டுமென்ற ஆதங்கம் இன்றும் கூட மக்கள் மத்தியில் உண்டு.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை வருடங்கள் கடந்து விட்ட போதிலும், அந்த எதிர்பார்ப்பு இன்னுமே நிறைவேறவில்லையென்ற மனக்குறை மக்களிடம் இருந்தபடியே உள்ளது.
ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் பலரும் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர். சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டும் உள்ளனர். ஆனாலும் குற்றமிழைத்தோருக்கு தண்டனை வழங்குவதில் தாமதம் நிலவுகின்றதென்பதே மக்களின் மனக்குறை ஆகும்.
அதேசமயம், ஊழல்முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அதிகாரிகள் மட்டத்திலுள்ளோர் நீதி விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனரே தவிர, அம்முறைகேடுகளுக்குக் காரணமான பிரதான சூத்திரதாரிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லையென்ற மனக்குறையும் மக்களிடம் இல்லாமலில்லை.
முன்னைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பங்களிப்பு வழங்கிய அனைத்து மக்களிடமும் இந்த மனக்குறை உண்டு. அதேசமயம் குற்றமிழைத்தோருக்குத் தண்டனை வழங்குவதில் இன்றைய அரசு தவறி விட்டதாகவும் பொதுவான மனக்குறை நிலவி வருகின்றது.
இவ்வாறான நிலையில் ஊழல்முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் ஒருபோதும் பாதுகாக்காதென்றும், எவர் தவறிழைத்தாலும் அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் தயங்கப் போவதில்லையெனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் ஹற்றனில் வைத்துத் தெரிவித்திருக்கிறார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டிருக்கின்ற இவ்வேளையில், பிரதமர் ரணில் இக்கருத்தைத் தெரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ரவி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் அரசாங்க உயர்மட்டம் தற்போது கடைப்பிடிக்கின்ற நடுநிலைமைத் தன்மையும், பிரதமர் ரணில் அளித்திருக்கின்ற உத்தரவாதமும் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டு விவகாரத்தில் அரசு கொண்டுள்ள கண்டிப்பான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகின்றன.
குற்றமிழைக்கும் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லையென்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.