பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வேலையை விட மறுத்த பெண்ணின் தலையை அவரது கணவரே துண்டித்து கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின், லாகூர் நகருக்கு அருகிலுள்ள ஷாம்கே பாட்டியான் பகுதியை சேர்ந்தவர் நஸ்ரின்(37). அவரது கணவர் பெயர் அஃப்ராஹிம். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நஸ்ரின், ராய்விந்த் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். அவர் வெளியில் சென்று வேலை பார்ப்பதை பிடிக்காத அவரது கணவர் வேலையை விடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
எனினும் இதைப் பொருட்படுத்தாத நஸ்ரின் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்துள்ள நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் நஸ்ரின் தூங்கிய அறை உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவரது குழந்தைகள் பலமுறை முயற்சித்தும் திறக்க முடியாததால் அருகில் உள்ளவர்களின் உதவியை நாடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அருகில் இருப்பவர்களின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அறையின் உள்ளே நஸ்ரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் நஸ்ரினின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையின் போது, நஸ்ரினின் கணவர் தான் அவரை கொலை செய்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காத கணவர் வீட்டில் அனைவரும் தூங்கிய பின் நஸ்ரின் தூங்கிய அறையின் கதவை உள் பக்கமாக பூட்டிவிட்டு, அவரது தலையை துண்டித்து கொன்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.