ராக்கி கயிறு வாங்க ரூ.10 கொடுக்க கணவர் மறுத்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ரக்ஷாபந்தன்‘ தினத்தையொட்டி ராக்கி வாங்க ரூ.10 கொடுக்க கணவர் மறுத்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
raksa

பெங்களூரு,

இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் ‘ரக்ஷாபந்தன்‘ கொண்டாடபட்டது. இந்த தினத்தில் பெண்கள் தங்களின் சகோதரர்களின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர்களின் கையில் ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். இதற்கு கைமாறாக சகோதரர்கள், அவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள்.

இந்த நிலையில், ‘ரக்ஷாபந்தன்‘ தினத்தில் ராக்கி கயிறு வாங்க பணம் கொடுக்க மறுத்ததால் பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:–

பெலகாவி மாவட்டம் சகாபுரா அருகே மல்லபிரபா நகரில் வசித்து வருபவர் அசோக். இவருடைய மனைவி மகாதேவி(வயது 23). இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான புதிதில் கணவன்–மனைவி 2 பேரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அசோக் அடிக்கடி மதுபானம் குடித்து விட்டு மகாதேவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ‘ரக்ஷாபந்தன்‘ தினமான நேற்று முன்தினம் மகாதேவி தனது சகோதரருக்கு ராக்கி கயிறு கட்ட விரும்பினார். ராக்கி கயிறு வாங்குவதற்காக அவர் அசோக்கிடம் ரூ.10 கேட்டுள்ளார். இருப்பினும், அசோக் பணம் கொடுக்க மறுத்துள்ளதாக தெரிகிறது.

இதனால், மகாதேவி மனம் உடைந்து காணப்பட்டார். இதற்கிடையே,

அசோக் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த மகாதேவி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்ற அசோக் வீட்டுக்கு வந்தபோது மகாதேவி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சகாபுரா போலீசார் விரைந்து வந்து மகாதேவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், ராக்கி கயிறு வாங்க அவருடைய கணவர் ரூ.10 கொடுக்க மறுத்ததால் மகாதேவி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து மகாதேவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சகாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராக்கி கயிறு வாங்க கணவர் ரூ.10 கொடுக்காததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.