அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திசென்று பாலியல் துஷ்பிரயோகம் புரிந்தவருக்கு உதவி, ஒத்தாசை புரிந்த இரு பெண்களை நேற்றுக் காலை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டர்களில் ஒருவர் சிறுமியின் உறவினரான ஆலையடிவேம்பு கோளாவில்-3ஆம் பிரிவைச்சேர்ந்த 52 வயதுடைய பெண்ணாவார். மற்றைய பெண் பொத்துவில்-10 ஆம்பிரிவில் வசிக்கும், சந்தேக நபரின் உறவினரான 50 வயதுடைய பெண்ணாவார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ஆலையடிவேம்பு கோளாவில்-2ஆம் பிரிவைச்சேர்ந்த 23 வயதுடைய நபரொருவர் கடந்தமாதம் 31ஆம் திகதி சிறுமியை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து பொத்துவில் பிரதேசத்துக்கு கடத்தி சென்று பொத்துவில் இன்ஸ்பெக்டர் ஏத்தத்தில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ளனர். மறுநாள் சிறுமியை அழைத்து வந்து கோளாவில்- 3ஆம் பிரிவில் உள்ள வீடொன்றில் விட்டுச்சென்றுள்ளார்.
இதேவேளை சிறுமியின் கடத்தல் சம்பவம் தொடர்பாக சந்தேக நபரான கடத்திய இளைஞனும், சிறுமியின் தாயும் கடந்த 5ஆம் திகதி கைது செய்யப்பட்டு அன்றைய தினம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எச்.சமீம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது பதில் நீதவான் இருவரையும் இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.