இயற்கையை ரசிப்பவரா நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய அபர்டீன் எனும் அதிசயம்!

இயந்திரம் போல சுழன்று கொண்டிருக்கக்கூடிய இந்த பரந்து விரிந்த உலகத்தில் எல்லாவிதமான அனுபவங்களையும், சுவாரஸ்யங்களையும் விரைவில் ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் எம்மவர்களிடையே தற்போது வேகமாக பரவி வருகின்றது.

அதுவும் இன்றைய இளைய தலைமுறையினரைதான் இந்த எண்ணங்கள் வெகுவாக ஈர்த்து வருகின்றன. மிக பிரபலமான இடங்களில் சென்று செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா” என்ற கூற்றோடு பதிவுகளை இடும் இன்றைய கலாச்சாரத்தை யாராலும் விட்டு விலகிச் செல்ல முடியாத அளவுக்கு பின்னிப்பிணைந்து விட்டது.

ap1

 

ஆனால் இது போன்ற ஒரு சிலருக்கு சுவர்க்கமே நம்மூரில் தான் இருக்கின்றது என்ற உண்மை புரிவதில்லை.

மழை, வெள்ளம், மண்சரிவு, என பல்வேறு பகுதிகளிலும் அபாய நிலைகள் காணப்பட சுற்றுலாத் தலங்களுக்கான சிறந்த இடத்தை தெரிவு செய்வது என்பது இலகு அல்ல.

இவ்வாறு பலரும் அறிந்திராத ஒரு இடம்தான் அபர்டீன் நீர்வீழ்ச்சி. என்ன பெயர் புதிதாக இருக்கின்றதா?? புரியாத பல புதிய இயற்கை அற்புதங்களைக் கொண்டது மத்திய மலைநாடு என்பதற்கு இந்த நீர்வீழ்ச்சியும் ஒரு சான்று!

ap2

“அபர்டீன்” ஸ்கொட்லாந்து நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய நகரம். இலங்கைத் தேயிலையின் மீது காதல் கொண்டு இலங்கை வந்த ஸ்கொட்லாந்து நாட்டவர்களால் இந்த நீர்வீழ்ச்சிக்கு அபர்டீன் என்ற பெயர் சூட்டப்பட்டதாக வழிவந்த கதைகள் கூறுகின்றன.

மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேன பகுதிக்கு அருகே உள்ள கெஹெல்கமுவ ஓயாவின் அருகிலே இந்த நீர்வீழ்ச்சி காணப்படுகின்றது.

 

98மீ(322 அடி) உயரமான இந்த நீர்வீழ்ச்சி கினிகத்தேன நகரில் இருந்து அம்பத்தலை சாலை வழியாக சென்று பின்னர் ஒரு சிறிய பாதையில் 1.2கி.மீ நடந்து செல்லும் போது கண்ணுக்கு குளிர்ச்சியாய் காட்சியளிக்கும்.

ap6

எனினும் இந்த நீர்வீழ்ச்சியில் கீழிறங்கி குளிப்பது உகந்ததல்ல.. அதிகளவிலான ஆழத்தை நீர்வீழ்ச்சியின் மையப்பகுதி கொண்டுள்ளது. அழகுள்ள இடத்தில் நிச்சயம் ஆபத்தும் இருக்கத்தானே செய்யும்!

இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி சில சுற்றுலா விடுதிகளும் இதனை அண்டிய பகுதிகளில் அமையப்பெற்றுள்ளன.

 

இந்த நீர்வீழ்ச்சிக்கான பயணத்தை தொடரும் போது செல்லும் பாதையின் இடையிடையே சிறு சிறு நீரோடைகளும், அவற்றின் காதுக்கினிய ஓசையும், காட்டின் வழியே ஓடும் குளிர்ந்த தெளிந்த நீரும் உள்ளத்தை கொள்ளைக் கொள்ள வல்லவை.

ஓர்கிட், அந்தூரியம், கடுகுப்பூ, குரோட்டன்கள், சேம்பு, ஆற்றுவாளை, கோடசாரை, கோப்பி, மலைவாழை இப்படி பல்வேறான தாவரங்கள் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிக் காணப்படும் வனப்பகுதியில் ரம்மியமாய் காட்சியளிக்கின்றன.

 

உயரத்திலிருந்து கொட்டுகின்ற நீர்த்தாரைகளும், அதன் ஆர்ப்பரிக்கும் ஓசையும், புகைமூட்டமாக சூழ்ந்து கொண்ட நீர்த் தூறல்களும் இதுவரை அறிந்திராத ஒரு புது அனுபவத்தை புகட்டுவதாய் அமையும்.

இருப்பினும் இப்படி ஒரு சூழலில் இதமான காலநிலையில் வாழ்ந்து மரணிப்பது என்பது கடவுள் கொடுக்கும் இரண்டாவது சொர்க்கம்தான்.