ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பிறகும் அமெரிக்காவை தாக்க திட்டமிட்டுள்ள வடகொரியா

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அந்நாட்டின் குவாம் தீவை தாக்க வல்ல ஏவுகணை சோதனையை நடத்த வடகொரியா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

kim jong

இதுகுறித்து வடகொரியா தரப்பில் இன்று (புதன்கிழமை) கூறும்போது, “அமெரிக்காவின் பசிபிக் பகுதியில் உள்ள தீவான குவாம் பகுதியை தாக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்டங்களை கவனமாக பரிசோதித்து வருகிறோம்”என்று கூறியுள்ளது.

மேலும் வட கொரியாவின் ராணுவ தகவல்களை வெளியிடும் கேசிஎன்ஏ ஊடகத்தில், “அதிபர் கிம் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவரிடமிருந்து அனுமதி வந்தவுடன் செயல்படுத்துவோம்” என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவை அச்சுறுத்து நடவடிக்கைகளில் வடகொரியா ஈடுபட நினைத்தால் அதற்கான விளைவை அந்நாடு எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதற்கு சில மணி நேரங்களில் வடகொரியா தரப்பில் இம்மாதிரியான பதில் தரப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த மிரட்டல் குறித்து குவாம் கவர்னர் கூறும்போது, ”நாங்கள் வெறும் ராணுவம் தடவாள பகுதி மட்டுமல்ல, அமெரிக்காவின் மண். குவாம் எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள தயராக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து வெள்ளை மாளிகையுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்றார்.

முன்னதாக சர்வதேச சட்டதிட்டங்கள், ஒப்பந்தங்கள், ஐ.நா.வின் விதிகள் எல்லாவற்றையும் மீறி அணுஆயுத சோதனை நடவடிக்கைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. அத்துடன் அதிநவீன ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் ஏவுகணையை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

இதையடுத்து வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடையை விதிக்க ஐ.நா.வில் அமெரிக்கா ஒரு புது தீர்மானம் கொண்டு வந்தது. அந்தத் தீர்மானத்துக்கு கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளும் ஒருமனதாக ஒப்புதல் வழங்கின.

இந்தத் தடை குறித்து வடகொரியா, எங்கள் நாட்டின் அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது. அமெரிக்கா எங்களை மிரட்டி வந்தாலும், நாங்கள் அணுஆயுதம் தொடர்பான விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த முன்வர மாட்டோம்” என்று கூறியிருந்தது.

வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை பதலளித்தபோது, “வடகொரியா அமெரிக்காவை அச்சுறுத்தும் நடவடடிக்கைகளில் ஈடுபடமால் இருப்பது அவர்களுக்கு நல்லது. இல்லை என்றால் அவர்கள் இதுவரை இந்த உலகம் காணாத விளைவை சந்திப்பார்கள்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.