மூன்று பத்தாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதன் மூலம் அனைவரும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். ஆனால், என்னால் அதனை அனுபவிக்க முடியவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
“ என்னால் எந்தவொரு நாட்டுக்கும் செல்ல முடியவில்லை. ஏனென்றால் அனைத்துலக சக்திகள் என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க காத்திருக்கின்றன.
பல நாடுகளில் எனது தலைமையிலான குழுவினர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.
2011ஆம் ஆண்டு கொமன்வெல்த் மாநாட்டுக்காக, அவுஸ்ரேலியா சென்றிருந்த போது, தமது பிள்ளைகளை என்னால் இழக்க நேரிட்டதாக கூறி, சிலர் என்னைக் கைது செய்யுமாறு கோரினர்.
நான் பிரித்தானியா சென்றிருந்த போது, எனது குழுவில் இருந்தவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முயன்றனர்.
அமெரிக்கா சென்ற போது எனக்கு எதிராக சிலர் நீதிமன்றம் சென்றனர். எனினும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக நான் முறையிடவில்லை.
நாடும் மக்களும் சுதந்திரத்தைப் பெற்றுள்ள போதிலும், அதன் நன்மைகள் எனக்குக் கிடைக்கவில்லை.
போர் முடிவுக் கொண்டு வரப்பட்டது தான் நல்லிணக்கம். இன்று நல்லிணக்கத்தின் பெயரால், சிலர் நாட்டைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.