சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பான விசாரணைகளில் சிக்கியுள்ள ரவி கருணாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அழுத்தங்கள் அதெிகரித்துள்ளன.
இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்றுக் காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ரவி கருணாநாயக்க பங்கேற்கவில்லை.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ரவி கருணாநாயக்கவுடன் தனியாகப் பேச்சுக்களை நடத்தினர். சுமார் ஒரு மணிநேரம் இந்தக் கலந்துரையாடல் நீடித்துள்ளது.
இதையடுத்து, வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க விரைவில் விலகிக் கொள்ளக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான முடிவை சபாநாயகர் இன்று அறிவிக்கவுள்ள நிலையில், சிறிலங்கா பிரதமர் இன்று முடிவு ஒன்றை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.