கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு விவாகரத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மறைந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் கஷ்யப்பானவரின் மகன் தேவானந்த் என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனது முறைப்பெண்ணான ரம்யாவை திருமணம் செய்துகொண்டார்.
தேவானந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை அறிந்த ரம்யா அவருடன் சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதில், எனக்கு 25 வயது ஆவதால், எனது எதிர்காலத்துக்காக ரூ.5 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ரம்யா கோரியிருந்தார்.
இதையடுத்து நீதிமன்றம் தேவானந்தின் தாய் லட்சுமியை விசாரித்தபோது, “எனது மகனிடம் ஏராளமான சொத்துகள் உள்ளன.
குவாரி தொழில் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார் பயன்படுத்துகிறார்.
எனவே தேவானந்தால் எனது மருமகளுக்கு ரூ. 5 கோடி ஜீவனாம்சம் வழங்க முடியும் என மருமகளுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.பாக்யா, இருவருக்கும் விவகாரத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல், தேவானந்த் தனது முன்னாள் மனைவியின் எதிர்கால தேவைக்காக ரூ. 4.85 கோடி ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு வெளியானதும் மருமகளும், மாமியாரும் ஆரத் தழுவி, அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.