தாய்ப்பால், தாய்க்கும், குழந்தைக்கும் பாசப்பிணைப்பை உருவாக்கும்

தாய்ப்பால் குழந்தைக்கு ஊட்டச்சத்தினை மட்டும் தருவதில்லை. கூடவே, தாய்க்கும், குழந்தைக்கும் இடையே பாசப்பிணைப்பு உருவாகவும் உதவுகிறது.

mothers_feed

தாய்ப்பால், தாய்க்கும், குழந்தைக்கும் பாசப்பிணைப்பை உருவாக்கும்
“பொறுப்புவாய்ந்த, நம்பிக்கை கொண்ட ஒரு நாட்டை உருவாக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படி விரும்பினால், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுங்கள்” என்று டெல்லியை சேர்ந்த, புதிதாக பிறந்த சிசுகளுக்கான மருத்துவ நிபுணரும், குழந்தைகள் நல மருத்துவ நிபுணருமான டாக்டர் ரகுராம் மல்லையா சொல்கிறார்.

குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்மார், தாய்ப்பாலூட்டுகிறபோது, அந்த குழந்தை புட்டிப்பால் குடித்து வளர்கிற குழந்தையைக் காட்டிலும் சிறப்பான நோய் எதிர்ப்புச்சக்தி, நல்ல கண்பார்வை, விரைவான வளர்ச்சியைப் பெறும் என்கிறார் இவர்.

தாய்ப்பாலின் மேன்மை குறித்து, டாக்டர் ரகுராம் மல்லையா சொல்லும் முக்கிய அம்சங்கள் இவை:-

* எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்புக்குள்ளான பெண்கள் கூட, தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் தரலாம்.

* தாய்ப்பால் குழந்தைக்கு ஊட்டச்சத்தினை மட்டும் தருவதில்லை. கூடவே, தாய்க்கும், குழந்தைக்கும் இடையே பாசப்பிணைப்பு உருவாகவும் உதவுகிறது.

* தாய்ப்பாலூட்டுகிற தாய்மார், சினைப்பை புற்றுநோய், மார்பகப்புற்றுநோய் வராமல் காத்துக்கொள்ள முடியும். இவர்களுக்கு இந்த வகையிலான புற்றுநோய் வருவதற்கு 70 சதவீதம் வாய்ப்பு குறைவு என ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.

* தாய்ப்பால் சுரப்பதற்கும், பிரசவம் எப்படி அமைகிறது, அது சுகப்பிரசவமா, சிசேரியனா என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அது தாயின் உடலமைப்பு, ஹார்மோன்கள் சுரப்பை பொறுத்ததாகும்.

* தாய் வெளியே செல்கிறபோது பாலை ஒரு பாட்டிலில் சேகரித்து, குளிர்பதனப்பெட்டியில் வைத்து தரலாம். தாய்ப்பால் 24 மணி நேரம் பயன்படுத்தத்தக்கது.

* புதிதாக பிறந்த குழந்தைக்கு ஒரு போதும் பசுவின் பாலைத்தரக்கூடாது. காரணம், அது அதிகபட்ச புரதச்சத்தினை கொண்டுள்ளது. அதை ஜீரணிக்கும் சக்தி புதிதாய் பிறந்த குழந்தைக்கு கிடையாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

டாக்டர் ரகுராம் மல்லையாவின் சிந்தனையில், டெல்லியில் ‘அமரா’ என்ற பெயரிலான தாய்ப்பால் வங்கி உதயமாகி செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு 500 லிட்டர் தாய்ப்பால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தரப்பட்டு, குழந்தைகளுக்கு தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.