‘பொலிஸாரை நானே வெட்டினேன்’ – விக்டர் நிசா வாக்குமூலம்!

யாழ்.கோப்பாய் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் தானே வெட்டியதாக, ஆவா குழுவின் தலைவரான விக்டர் நிசா எனப்படும் நிசாந்தன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

8f14e45fceea167a5a36dedd4bea2543_1461753454-b-300x160-765x5101-720x450

கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற இவ் வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கொழும்பில் கைதுசெய்யப்பட்ட விக்டர் நிசா உள்ளிட்ட மூவர், யாழ்ப்பாணத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு குற்றப்புலனாய்வு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் நேரடி கண்காணிப்பில் இடம்பெறும் இவ் விசாரணைகளின்போதே, விக்டர் நிசா இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தமது குழுவிலிருந்து விலகிச் சென்று, பிறிதொரு குழுவை உருவாக்க முயற்சித்த ‘தனு ரொக்’ என்பவரை வெட்டுவதற்காகவே தமது சகாக்களுடன் கோப்பாய் பகுதிக்குச் சென்றதாகவும், அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மை கைதுசெய்யவே வருகின்றனர் என கருதியே அவர்களை வெட்டியதாகவும் விக்டர் நிசா வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில், விக்டர் நிசா உள்ளிட்ட மூவர் கொழும்பில் கடந்த திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டனர். ஆவா குழுவினர் என சந்தேகத்தின் பேரில் இதுவரை சுமார் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.