ஊடகவியலாளர் லசந்த தொடர்ச்சியாக அடித்தே கொலை செய்யப்பட்டார்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க ஆயுதமொன்றினால் தலை மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினாலேயே உயிரிழந்திருப்பதாக இரண்டாவது தடவையாகவும் மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Lasantha_Wickrematunge

முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனை அறிக்கைக்கும் அரச இரசாயண பகுப்பாய்வாளரின் விசாரணை அறிக்கைக்கும் இடையில் கடும்முரண்பாடுகள் இருந்ததை அடுத்து சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் உடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகரும் அதன் முதலாவது ஆசிரியருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அப்போதைய மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொடிய யுத்தத்தை கடுமையாக விமர்சித்து வந்ததுடன் யுத்தத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட மிக் விமானக் கொள்வனவு உட்பட ஆயுதக் கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் தனது பத்திரிகையில் பல தகவல்களை அம்பலப்படுத்திய நிலையிலேயே லசந்த படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இதனால் இந்தப் படுகொலைக்கும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் தொடர்பிருப்பதாக வெளிப்படையாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும் லசந்தவின் படுகொலை தொடர்பிலான விசாரணைகளை அப்போதைய மஹிந்த அரசாங்கம் கிடப்பில் போட்டிருந்தது.

ஆனால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து அதிகாரத்திற்கு வந்த மைத்ரி – ரணில் அரசாங்கம் லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்தது.

இதற்கமைய லசந்தவின் படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த படுகொலைக்கு இராணுவப் புலனாய்வாளர்களுக்கு தொடர்பிருப்பதாக நீதிமன்றில் அறிவித்ததுடன் சிலரை கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தினர்.

அதேவேளை லசந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் அரச இரசாயண பகுப்பாய்வாளரின் அறிக்கைக்கும் கடும் முரண்பாடுகள் இருப்பதை கண்டுபிடித்திருந்த குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மற்றுமொரு பிரேத பரிசோதனைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதற்கமைய நீதிமன்றின் உத்தரவின் பேரில் லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு இரண்டாவது தடவையாகவும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு நேற்றைய தினம் கல்கிசை நீதவான் நீதிமன்றில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

கல்கிசை பிரதான நீதவான் முகம்மட் மிகைலிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேத பரிசோதனை அறிக்கைக்கு அமைய லசந்தவின் தலை மீது தொடர்ச்சியாக பல தடவைகள் மொட்டையான ஆயுதமொன்றினால் தாக்குதல் நடத்தியதாலேயே அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.